சேலம் மாவட்டம் தெற்கு சட்டமன்ற தொகுதி கொண்டலாம்பட்டி அதிமுக பகுதி கழகம் சார்பில் அண்ணா பிறந்தநாள் பொது கூட்டம் தாதகாப்பட்டி பகுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசும்போது, ”சேலத்தை உலக அளவில் பேச வைத்தவர் எடப்பாடி பழனிசாமி. முதலமைச்சர் செய்யவேண்டிய திட்டங்களை எதிர்கட்சி தலைவராக இருந்து எடப்பாடி பழனிசாமி செய்துவருகிறார். டெல்லி சென்றவர் நடந்தாய்வாழி காவேரி, காவிரி-கோதாவரி திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை விடுத்துள்ளார். திமுக தேர்தல் வாக்குறுதியில் நீட் தேர்வை ரத்து செய்யும் யுக்திகள் எங்களிடம் உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்த செய்து விடுவோம் என கூறிய திமுக இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற குற்றம் சாட்டினர். அதிமுக ஆட்சியில் நீட் தேர்வு ரத்து செய்வதற்காக போராடினாலும், 7.5 சதவித உள்ஒதுக்கீடு மூலம் ஏழை அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வகையில் ஏற்படுத்தி தந்தவர் எடப்பாடி பழனிசாமி என்றார்.



2011 முன்பு முதியோர் உதவித்தொகை 1200 கோடி வழங்கினார்கள். அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா 4500 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது ஒரே உத்தரவில் 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவிதொகை வழங்க உத்தரவிட்டார் என்ற அவர் அதிமுக ஆட்சியில் 52 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி தரப்பட்டது. ஆனால் இவற்றை எல்லாம் நிறுத்தியது திமுக அரசு என்று பேசினார். தொடர்ந்து பேசிய அவர், திமுகவில் ஜனநாயகம் இல்லை. அதனால்தான் தற்போது சுப்புலட்சுமி ஜெகதீசன் வெளியேறி உள்ளார். அடுத்தடுத்து ஒவ்வொருவராக வெளியேற உள்ளனர் என்றார்.


அதிமுக ஆட்சியில் சிறந்த காவல்துறையாக இருந்த தமிழக காவல்துறை, தற்போது சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் வகையில் உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 2000 அம்மா மினி கிளினிக் திட்டத்தை தற்போது முழுமையாக மூடிவிட்டனர். இதுபோன்று மகளிருக்கு இருசக்கர வாகனத்திற்கு மானியம் திட்டம், பட்டதாரி பெண்களின் திருமணத்தின் போது வழங்கப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டம், ஏழை மக்கள் தரமான உணவருந்திட தொடங்கிய அம்மா உணவகம் திட்டம் என அனைத்தும் திமுக நிறுத்தப்பட்டுள்ளது என்று கூறினார். கொரோனா இந்தியாவில் அதிகரிக்க தொடங்கியபோது இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழ்நாட்டில் தான் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டது என்றார்.



திமுக அரசை விமர்சித்தால் சோதனை நடத்துகின்றனர். எத்தனை வழக்கு போட்டாலும் சட்டப்படி சந்திப்போம். அதிமுக மனித புனிதரால் தொடங்கப்பட்ட, தெய்வசக்தி பெற்ற இயக்கம். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆன்மா, எடப்பாடியாரை வழி நடத்துகிறது. திமுகவிடம் இருந்து அதிகவை காப்பாற்ற வேண்டும் என்றால் எடப்பாடியாரால்தான் முடியும் என்று பேசிய அவர், மத்திய அரசிடம் இருந்து எத்தனை அழுத்தம் இருந்தாலும் மின்கட்டணம் உயர்த்தி ஏழைமக்களுக்கு சுமை திணிக்கக்கூடாது என்று எடப்பாடியார் கவனத்துடன் இருந்தார். சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் இரட்டை இலைதான் வெற்றிபெறும் என ஆர்.பி.உதயகுமார் பேசினார்.