சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் நேற்று இரவு, இவரது நண்பர்களுடன் தேநீர் கடையில் குடித்துக் கொண்டிருந்தபோது அதே கிராமத்தை சேர்ந்த நவீன் குமார் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் வந்து தேநீர் அருந்த வந்துள்ளனர். அப்போது வாகனம் நிறுத்துவது தொடர்பாக சக்திவேல் தரப்பினருக்கும், நவீன் குமார் தரப்பினருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. பின்னர் இருவரும் மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது. இதனால் அங்கிருந்தவர்கள் இரண்டு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பின்னர் சிறிது தூரம் சக்திவேல் சென்று கொண்டிருந்தபோது, அங்கு நவீன் குமார் மற்றும் அவரது நண்பர்கள் வந்து மீண்டும் சக்திவேலிடம் வாய்தகராறு செய்தனர். இதனால் கோபமடைந்த சக்திவேல் ஆட்டையாம்பட்டி காவல் நிலையம் சென்று புகார் செய்தார். இதையறிந்த நவீன் குமார் மற்றும் அவர்களது நண்பர்கள் ஆட்டையாம்பட்டி காவல் நிலையம் வந்து அவர்களும் புகார் செய்தனர். 



பிறகு இரண்டு தரப்பினரும் மாறிமாறி அடித்து உதைத்து தகராறு செய்தனர். அப்போது குடிபோதையில் இருந்த வாலிபர் ஒருவர் மயங்கி விழுந்தார். இதனால் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அறிந்த ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்திற்கு கூடுதல் போலீசார் வந்து இரண்டு தரப்பினரையும் சமாதானம் செய்து வைத்தனர். பிறகு கீழே விழுந்து மயங்கி கிடந்த வாலிபருக்கு மயக்கம் தெளிய வைத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த இரண்டு தரப்பு மோதல் தொடர்பாக போலீசார் விசாரித்து நவீன் குமாரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த மோதல் தொடர்பாக மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர். ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் இரண்டு தரப்பினர் மோதிக்கொண்ட காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.