தமிழக, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கன அடிக்கு குறைவாகவே தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மழை குறைந்ததால், காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்தது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கர்நாடக மற்றும் தமிழக காவிரி கரையோரங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.
நேற்று காலை வினாடிக்கு 45,000 கன அடியிலிருந்து 50,000, 57,000, 60,000, 67,000 கன அடி என படிப்படியாக உயர்ந்தது. மேலும் தமிழக காவிரி கரையோரங்களிலும், ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, பஞ்சப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளை சுற்றியுள்ள மலை மற்றும் வன பகுதிகளில் இடைவிகாமல் கன மழை பெய்துள்ளது. இதனால் இன்று காவிரி ஆற்றில் மீண்டும் நீர்வரத்து அதிகரித்து, இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 70,000 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் ஒகேனக்கல் பிரதான அருவிக்கு செல்லும் நடைபாதை, ஐந்தருவி, மெயின் அருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளே தெரியாதவாறு, பாறைகளை மூழ்கடித்து வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
இதனால் ஒகேனக்கல்லில் , பாறைகள் தெரியாமல் வெள்ளக் காடாக காட்சியளித்து வருகிறது. தொடர்ந்து மீண்டும் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கடந்த 10 நாட்களுக்கு மேலாக ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடையை நீட்டித்து வருகிறது. தொடர்ந்து காவிரி வெள்ளம் வருவதால், வருவாய் பேரிடர், காவல், தீயணைப்பு மற்றும் ஊரக வளர்ச்சி துறையினர் ஆற்றங்கரை பகுதியில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் உள்ள நீர் அளவிடும் பகுதியில் மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகள் தொடர்ந்து நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர். மேலும் சின்னாற்றிலும் வெள்ள பெருக்கு ஏற்பட்டு, காவிரி ஆற்றில் ஒகேனக்கல்லில் கலந்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு செல்லும் நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.