காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 10 ஆயிரம் கனஅடிக்கு குறைவாகவே இருந்து வருகிறது. ஆனால் வட கிழக்கு பருவமழையால் தமிழக, கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை நிலவரப்படி காவிரியாற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 70,000 கனஅடியாக இருந்தது. தொடர்ந்து காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது மழை குறைந்து வருவதால் நீர்வரத்து குறைந்து வினாடிக்கு 60,000 கனஅடியாக உள்ளது.  தொடர்ந்து கனமழை பெய்ததால் கடந்த 5 நாட்களாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஒகேனக்கல்லில் அருவிகள், பாறைகளை மூழ்கடித்து வெள்ளக்காடாக காட்சி அளித்து வருகிறது. 

 



 

தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் காவிரி ஆற்றங்கரையோரம் வருவாய் பேரிடர், ஊரக வளர்ச்சித் துறை, காவல் துறை, தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நீர்வரத்து அதிகரித்ததால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வள ஆணைய அலுவலர்கள் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

 



 

செல்போன் கடையில் மேற்கூரையை உடைத்து திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல் 

 

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த சோமனஹள்ளி பகுதியை சேர்ந்த நாச்சியப்பன் என்பவர், பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம் எதிரே செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம்  வழக்கம் போல கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். நேற்று காலை மீண்டும் கடையை திறந்து பார்க்கும் பொழுது கடையில் இருந்த செல்போன் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து சரிபார்த்தல் அடையாளம் தெரியாத நபர்கள் செல்போன் கடையின் மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கி கடையில் இருந்த ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான விலை உயர்ந்த செல்போன்கள், மெமரி கார்டுகள், பணம் உள்ளிட்ட ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை திருடி சென்றுள்ளனர்.  

 


 

இந்த திருட்டு சம்பவம் கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டிவி., காட்சியில் பதிவாகியிருந்தது. அந்தக் காட்சியில் ஒருவர் கடையில் மேற்கூரையை பிரித்து இறங்கி திருடுவது பதிவாகி உள்ளது. அதே போன்று அருகில் உள்ள மணி என்பவருக்கு சொந்தமான போட்டோ ஸ்டுடியோவின் மேற்கூரையை உடைத்து கேமரா, பிளாஷ் லைட் உள்ளிட்ட, 10 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். தொடர்ந்து பாலக்கோடு நகரில்  ஒரே நாளில் அடுத்தடுத்த இரு கடைகளில் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று உள்ளது. இது குறித்து சி.சி.டி.வியில் பதிவான காட்சியை வைத்து பாலக்கோடு  காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கின்றனர். மேலும் செல்போன் கடையில் வாலிபர் ஒருவர் திருடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலை தலங்களில் வேகமாக பரவி வைரமாக வருகிறது.