சேலத்தில் பழமை வாய்ந்த முக்கிய திருத்தலங்களில் மத்திய ரயில்வே மற்றும் ஜவுளித்துறை இணை அமைச்சர் தர்சனாபென் ஜர்தோஷ் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்துள்ள மத்திய ரயில்வே மற்றும் ஜவுளித்துறை இணை அமைச்சர் தர்சனாபென் ஜர்தோஷ் முக்கிய கோவில்களில் சுவாமி தரிசனம் செய்தார். நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த செவ்வாய்பேட்டை பாண்டுரங்கநாதர் கோவிலுக்கு வந்த மத்திய இணை அமைச்சருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதனையடுத்து கோவிலுக்கு சென்று மத்திய இணை அமைச்சர் தர்சனாபென் ஜர்தோஷ் சாமி தரிசனம் செய்தார். கோவிலில் இருந்த செளராஷ்ர மக்களையும் அப்போது அவர் சந்தித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பல நூறாண்டுகள் பழமை வாய்ந்த கோவிலின் சிறப்புகளை பார்வையிட்ட அமைச்சர், பிரசன்ன வரதராஜ் பெருமாள் கோவில், செளந்தர ராஜ பெருமாள் கோவில்களிலும் அமைச்சர் அமைச்சர் தர்சனாபென் ஜர்தோஷ் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் மத்திய அரசு மற்றும் குஜராத் அரசு சார்பில் செளராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி அடுத்த மாதம் நடத்தப்பட உள்ளது. இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடும் வகையில் சேலத்தில் செளராஷ்ரா தமிழ் சங்கம நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மத்திய ரயில்வே மற்றும் ஜவுளித்துறை இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் பேசிய அமைச்சர், "கலைத்திறன் மிக்கவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் விஸ்வகர்மா திட்டத்தினை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். செளராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் மூலம் தமிழகம்-குஜராத் இரு மாநில மக்களிடையே கலாசார இணைப்பு பலப்படும். கலை, கலாசாரம், ஜவுளி, வர்த்தகம், கல்வி, சுற்றுலா, ஆன்மீகம் ஆகிய அனைத்து துறைகளிலும் இரு மாநிலங்களின் பொதுமக்களிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. இரு மாநிலங்களிலும் ஒரே மாதிரியான பழக்க வழக்கங்கள் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வருகின்றன. ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற பிரதமரின் நோக்கத்தை அடையும் வகையில் செளராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படும்.
நாட்டின் 100-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படும் போது, அனைத்து துறைகளிலும் தன்னிறைவு பெற்றதாக அமைவதற்கு தேவையான நடவடிக்கைகளை பிரதமர் எடுத்து வருகிறார். வந்தே பாரத் திட்டத்தின் கீழ் 75 ரயில்கள் பல்வேறு நகரங்களை இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நகரங்கள் இணைக்கப்படும்போது, அத்துடன் மக்களின் மனங்களும் இயக்கப்படும். இதேபோன்று 75 ரயில் நிலையங்கள் அம்ரித் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட உள்ளது. இதில் சேலம் சந்திப்பு ரயில் நிலையமும் இடம்பெற்றுள்ளது. நாட்டின் வளர்ச்சிப் பாதையில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் எந்தவித பாரபட்சமும் இன்றி மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக விருதுநகரில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா தொடங்கப்பட்டுள்ளது. சேலம், கரூர், நாமக்கல் ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் உள்ளனர். இவர்களை சிறு குறு சங்கங்களுடன் இணைத்து வாழ்க்கைத் தரம் மேம்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் 146 பயிற்சி மையங்கள் வாயிலாக 13 லட்சம் கைத்தறி நெசவாளர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. மேலும் கைத்தறியை மேம்படுத்திட 63 பயனாளிகளுக்கு ரூ.45 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. தரம் உயர்த்திட ரூ.1.12 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஆதார் இணைப்புடன் கூடிய அடையாள அட்டை 52 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.