சேலம் மாநகர் அஸ்தம்பட்டி பகுதியில் சேலம் மத்திய சிறைச்சாலை இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 1200க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். சிறையில் உள்ள கைதிகளுக்கு அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப மேசை தயாரித்தல், துணி தைக்கும் பணி, பேக்கரி பொருட்கள் தயாரித்தல், சிற்றுண்டி தயாரித்தல் போன்று பல்வேறு பணிகள் ஒதுக்கப்படுகிறது. இதற்கான சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு அவர்கள் விடுதலையாகும் போது அவர்களிடம் பணத்தை ஒப்படைப்பது வழக்கம்.
இந்த நிலையில் சேலம் மத்திய சிறையில் சிறைக்கைதிகளை வைத்து "பிரிசன் பஜார்" என்ற பெயரில் பிஸ்கெட், பிரட், பன், காரச் சேவ், மிக்ஸர், முறுக்கு போன்ற பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக சிறையில் தயாரிக்கப்படும் பிரட் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சேலம் மத்திய சிறையில் உள்ள கைதிகளை கொண்டு பிரிசன் பஜாரில் புதிதாக டீ, காபி, முட்டை பப்ஸ், வெஜ் பப்ஸ், உளுந்த வடை, மசால் வடை, முட்டை போண்டா, வெங்காய பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி, வாழைக்காய் பஜ்ஜி, பிஸ்கட் வகைகள், லட்டு, பாதுஷா, சமோசா, மைசூர் பாகு, இட்லி, ஊத்தாப்பம், பூரி, பொங்கல், ஆனியன் தோசை, மசால் தோசை, சாப்பாடு, தக்காளி சாதம், தயிர் சாதம், எலுமிச்சை சாதம் உள்ளிட்ட உணவுகள் அறிமுகம் செய்யப்பட்டு கைதிகள் விற்பனை செய்து வருகிறது. இங்கு சிறையில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் பொருட்கள் அனைத்தும் கடைகளில் விற்கப்படும் விலையை விட குறைவான விலைக்கு விற்கப்படுகிறது. விற்பனையாகும் பொருட்கள் கணக்கெடுக்கப்பட்டு வரும் லாபத்தில், அந்தப் பொருட்களை தயாரித்த சிறை கைதிகளுக்கு பகிர்ந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரிசன் பஜாரில் விற்கப்படும் பொருட்களை சிறை கைதிகளுக்கு அவர்களது உறவினர்கள் வாங்கி கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள பிரிசன் பஜார் டீக்கடை வழியாக செல்லும் பொதுமக்கள் டீ, காபி குடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். விலை குறைவாக உள்ளதால் தங்களது வீட்டிற்கும் சிறையில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்கி செல்கின்றனர். இதேபோன்று வரும் நாட்களில் சிறை கைதிகளால் தயாரிக்கப்படும் ஷூ, சட்டை, பேண்ட், பெட்ஷீட், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணைய், புடவைகள் போன்றவையும் விற்பனைக்கு கொண்டு வர சேலம் மத்திய சிறை திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் துணிகள் அயர்னிங் பிரிவும், முடிவெட்டும் சலூனும் விரைவில் திறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக சேலம் மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு எடுக்கப்பட்டு வருகிறது.
சிறை தண்டனை காலம் முடிந்த பிறகு கைதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் விதமாக இது போன்ற காரியங்களில் சிறைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர். மேலும் கைதிகளை விற்பனை செய்யும் டீ, காபி உள்ளிட்டவைகளை பொதுமக்கள் ஆர்வத்தோடு வாங்கி அருந்தி வருகின்றனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.