தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பேரூராட்சிக்குட்பட்ட 6 ஏரிகளில் மீன் பிடி ஏலம் மற்றும் 130 புளியமரங்கள் ஏலம் கடந்த வாரத்தில் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.  ஆனால் முதல் ஏலத்தில் பல்வேறு குளறுபடிகள் இருந்ததால், ஏலம் முடிவாகவில்லை. இதை தொடர்ந்து இரண்டாவது ஏலம்  இன்று  நடக்கும் என அறிவிக்கப்பட்டது.  ஏலத்தில் கலந்து கொள்ள,  ஏலம் கேட்பதற்கான டெபாசிட் தொகையை வங்கி காசோலை மூலம் பேரூராட்சி அலுவலகத்தில் அளித்தனர். தொடர்ந்து காலை 11 மணிக்கு ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 

 



 

தொடர்ந்து ஏலதாரர்கள் வராததால்,  மதியம் 12.30 மணிக்கு ஏலம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஏற்கனவே டெபாசிட் தொகையை செலுத்திய அ.தி.மு.க. 6ஆவது வார்டு பெண் உறுப்பினரின் மகன்  பாரதி என்பவர் ஏல தொகைக்கு வழங்கப்பட்ட வங்கி காசோலை குறித்து கேள்வி எழுப்பியதுடன், வேறு பெயருக்கு மாற்ற வேண்டுமென கேட்டுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த பேரூராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் இளநிலை உதவியாளர் சந்தோஷ் என்பவர் அப்படி மாற்ற முடியாது என மறுப்பு  தெரிவித்துள்ளார். அப்பொழுது அதிமுகவே சேர்ந்த பாரதி மற்றும் அவருடன் வந்த அதிமுகவினர், ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

 


 

தொடர்ந்து வாக்குவாதம் முற்றிய  நிலையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது அதிமுகவை சேர்ந்த பாரதி பேரூராட்சி ஊழியர் சந்தோஷ்  கன்னத்தில் அரைந்தார். இதனை தொடர்ந்து  சந்தோஷ் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இந்நிலையில் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த ஏலத்தில் சந்தோஷ் தாக்கிய, அதிமுகவை சேர்ந்த பாரதி மீது, செயல் அலுவலர் சேகர், காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து காரிமங்கலம்  காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.  தொடரந்து காரிமங்கலம் பேரூராட்சி அலுவலகத்தில் அரசு அலுவலரை, அதிமுக பெண் உறுப்பினர் மகன், கன்னத்தில் அரைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பேரூராட்சி ஊழியரை தாக்கிய பாரதி, முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுடன் நெருங்கிய தொடர்புள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.