தருமபுரி மாவட்டம் கடத்தூர் விநாயகர் கோவில் பகுதியில் சாலையோரத்தில் 25000 ரூபாய் பணம் கேட்பாரற்று கிடந்துள்ளது. அப்போது அந்த வழியாக சென்ற கடத்தூர் பகுதியைச் சேர்ந்த சின்னசாமி, தனுஷன், மற்றும் முத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த முருகன் ஆகியோர் , இதை பார்த்து அந்த பணத்தை எடுத்தனர். ஆனால் அந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. இதனை தொடர்ந்து கேட்பாரற்று சாலையோரம் கிடந்த 25,000 ரூபாய் பணத்தை எடுத்து கொண்டு, கடத்தூர் காவல் நிலையத்திற்கு சென்று, நடந்ததை கூறி, உதவி ஆய்வாளர் பாஸ்கரிடம் ஒப்படைத்தனர்.
பணத்தை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் பணம் குறித்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், கீழே கிடந்த பணம், கடத்தூர் பகுதியில் உள்ள ஜவுளிகடை உரிமையாளர் ஆறுமுகத்தின் பணம் என தெரியவந்தது. தொடர்ந்து அவரை அழைத்த காவல் துறையினர் அந்த பணத்தை ஒப்படைத்தனர். தொடர்ந்து சாலையில் கேட்பாரற்று கீழே கிடந்த ரூ.25,000 பணத்தை எடுத்து வந்து காவல் நிலையத்தில் நேர்மையாக ஒப்படைத்த 3 இளைஞர்களின் நேர்மையை காவல் துறையினர் பாராட்டினர். மேலும் பணத்தை பெற்றுக் கொண்ட ஆறுமுகம் இளைஞர்களுக்கும், காவல் துறையினருக்கும் நன்றி தெரிவித்தார்.