சேலம் மாவட்டம் இடங்கணசாலை பகுதியை சேர்ந்த ராஜி. இவர் இன்று குடும்பத்தினருடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் உடனடியாக அவர்களிடமிருந்து மண்ணெண்ணெய் கேனை கைப்பற்றி, தீக்குளிக்க முயன்ற நான்கு பெண்கள் மீதும் தண்ணீரை ஊற்றி மீட்டனர்.



நில அபகரிப்பு:


பின்னர் விசாரணைக்காக சேலம் டவுன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றனர். அப்போது ஆட்டோவில் ஏற மறுத்து நான்கு பெண்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்று அழைத்துச் சென்றனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ராஜுவின் சகோதரர் குடும்பத்தினர் ஆறரை ஏக்கர் நிலத்தை அபகரித்து விட்டதாகவும், தங்களது நிலத்தை மீட்டுத் தரக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டது விசாரணை தெரியவந்தது.



தீக்குளிக்க முயற்சி:


இதேபோல் சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்த அம்மாசி என்பவரின் குடும்பத்தினர் 16 நபர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை மீட்டு ஆட்டோ மூலமாக விசாரணைக்காக சேலம் டவுன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அம்மாசி என்பவரின் தந்தைக்கு தானமாக கொடுக்கப்பட்ட 25 சென்ட் நத்தம் புறம்போக்கு நிலத்தில் வசித்து வந்துள்ளனர்.


அப்போது பாகல்பட்டி கிராம நிர்வாக அலுவலர் தனிநபருக்கு ஆதரவாக செயல்பட்டு தங்களது வீடுகளை இடித்து தரை மட்டமாக்கி விட்டதாக தெரிவித்துள்ளனர். எனவே கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுத்து தங்களது நிலத்தை மீட்டுத் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் குறைதீர் கூட்டம்:


வாரந்தோறும் திங்கட்கிழமை இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு மனு அளிக்க வரும் பொதுமக்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொது மக்கள் தற்கொலை முயற்சி ஈடுபட்டால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,


எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,


சென்னை - 600 028.


தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)