தருமபுரியில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணி பலத்த காவல் துறையினரின் பாதுகாப்புடன் நடைபெற்றது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 400 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணியை நடத்த காவல்துறையினர் அனுமதி அளித்தனர். இதையடுத்து இன்று தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்தப்பட்டது. இதையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட அறிவுறுத்தப்பட்டது.
நீதிமன்ற உத்தரவையடுத்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று ஆர்எஸ்எஸ் அமைப்பினர் 45 இடங்களில் ஊர்வலம் மற்றும் பேரணி நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து தருமபுரியில் இன்று ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணி முன்னாள் நகர மன்ற உறுப்பினர் பழனி தலைமையில் குமாரசாமிபேட்டை வாரியார் திடலில் ஆர்எஸ்எஸ் கொடிக்கு மலர் தூவி, குங்குமமிட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து 4 ரோடு சந்திப்பு, நகர பேருந்து நிலையம், நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் வாரியார் திடலில் நிறைவடைந்தது. இப்பேரணியில் 200 க்கும் மேற்பட்ட ஆர்எஸ்எஸ் தொண்ர்கள் கலந்து கொண்டனர். இன்று நடைபெறும் ஆர்எஸ்எஸ் பேரணி மற்றும் பொதுக் கூட்டத்திற்கு நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக பேரணியின் போது தனி நபர்கள், சாதி, மதம் பற்றி தவறாக பேசக்கூடாது. தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவாக எந்த கருத்தையும் பேசக்கூடாது. நாட்டின் இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் ஊறு விளைவிக்கும் எந்த ஒரு செயலிலும் ஈடுபடக் கூடாது. பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்ததாத வகையில் பேரணி மற்றும் நிகழ்ச்சி நடத்தி முடிக்க வேண்டும். கம்பு மற்றும் ஆயுதங்கள் எதையும் கைகளில் ஏந்தி செல்லக்கூடாது எனவும் தெரிவிக்கபட்டது.
அதனையடுத்து பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பாதுகாப்பு பணிக்காக தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில், மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர், 5 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 17 ஆய்வாளர்கள், ஊர்காவல் படையினர் என 400 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.