சேலத்தில் எத்திலின் ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்ட 1500 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாம்பழ சீசன் முடியும் வரை தொடர்ந்து சோதனை ஈடுபட உள்ளதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேலம் சின்னக்கடை வீதி பகுதியில் ரசாயனம் மூலம் மாம்பழங்களை பழுக்க வைக்கப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் தலைமையிலான குழுவினர் அதிரடி சோதனையில் இறங்கினர். அப்போது உமாபதி, குப்புசாமி என்பவர்களுக்கு சொந்தமான இரண்டு கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
அங்கு எத்திலின் ரசாயனத்தை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தி மாம்பழங்கள் பழுக்க வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு கடைகளிலும் இருந்து 1500 கிலோ ரசாயனம் தெளித்த மாம்பழங்கள் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கடையின் உரிமையாளர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக நியமன அலுவலர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் கூறுகையில், அளவுக்கதிகமான ரசாயனங்களைப் பயன்படுத்தி மாம்பழங்களை பழுக்க வைத்த 2 கடைகள் மீது வழக்குப்பதிவு செய்து, மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மாம்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில் கல் வைத்து பழுக்க வைப்பது, ரசாயனங்களை பயன்படுத்தி படுக்க வைப்பது போன்ற காரியங்களில் கடை உரிமையாளர்கள் ஈடுபடுவர். இவற்றை மக்கள் எளிதாக கண்டறியலாம். மாம்பழங்கள் மீது வெள்ளையாக பால் போன்று ஆங்காங்கே இருக்கும். இதுமட்டுமின்றி மாம்பழத்தின் மேல் மெழுகுபோன்ற தோற்றத்துடன் காணப்படும் மாம்பழங்களை மக்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்றார்.
மாம்பழங்களை காயாக இருப்பதை வாங்கி தங்களது வீடுகளில் உள்ள அரிசி பாத்திரத்தில் வைத்து அல்லது வாழைப்பழம் மற்றும் ஏதேனும் பழம் பழுத்த நிலையில் இருந்தால் அதனுடன் மாம்பழத்தை வைத்து அடைத்து வைத்தால் ஓரிரு நாட்களில் மாம்பழம் பழுக்கத் தொடங்கிவிடும் என்றார்.
மேலும் மாம்பழ சீசன் முடியும் வரை தொடர்ந்து அனைத்து கடைகளிலும் அதிரடி சோதனை மேற்கொள்ளப்படும் என்றும் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கதிரவன் தெரிவித்துள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட மாம்பழங்கள் குப்பை கிடங்குக்கு எடுத்துச்செல்லப்பட்டு அழிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மாம்பழத்தின் வரத்து குறைவு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் போன்ற காரணங்களினால் மாம்பழங்களில் விலை உயர்ந்துள்ளது. எனவே எளிதில் விற்பனை செய்வதற்காக காயாக இருக்கும்போதே வாங்கி அதனை பதப்படுத்தி அதிக லாபத்திற்கு விற்பனை செய்வதற்காக மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுகின்றனர்.