சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதிவுபெற்ற கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் கலந்துகொண்டு 10,496 தொழிலாளர்களுக்கு ரூ. 203 கோடி மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நிகழ்ச்சியின் போது சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் உடன் இருந்தனர்.


இதை தொடர்ந்து தொழிலாளர் நலன்-திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் உரையாற்றினார். அப்போது அவர் பேசியது, தமிழக முதல்வர் தொழிலாளர்களின் நலனுக்காக தனிகவனம் செலுத்தி வருகின்றார். தொழிலாளர்கள் எவ்வித கோரிக்கைகளும் எழுப்பாமலேயே அவர்கள் கேட்கும் நலத்திட்டங்களை மட்டுமல்லாது, கேட்காத பல்வேறு சிறப்பான திட்டங்களையும் அறிவித்து அதனைச் செயல்படுத்தக்கூடிய ஒரே முதலமைச்சர் நம் தமிழக முதல்வர் ஸ்டாலின் மட்டும் தான். எடுத்துக்காட்டாக ஆட்சிப்பொறுப்பு ஏற்றவுடன் கல்வி, மகப்பேறு, திருமணம், விபத்து மற்றும் இறப்பு உதவித் தொகைகள் போன்ற பல்வேறு உதவித் தொகைகளை கோரிக்கைகள் வைக்கப்படாமலேயே உயர்த்தி வழங்கியுள்ளார்.



தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற போது தொழிலாளர்களுக்குரிய உதவித் தொகை கோரி 1.07 இலட்சம் மனுக்கள் நீண்ட நாள்களாக தீர்க்கப்படாமல் இருந்தது. தொழிலாளர்களின் பிரச்சனைகளை விரைவாக தீர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவற்றின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு 15 நாள்களில் கோப்புகள் தயார் செய்து ஒரே நாளில் 50 ஆயிரம் தொழிலாளர்களுக்கு அவரவர் வங்கிக் கணக்கில் உதவித்தொகை சேர்க்கப்பட்டது. பிறகு இரண்டு மாதங்களில் மீதமுள்ள 57 ஆயிரம் தொழிலாளர்களுக்கும் அவரவர் வங்கிக் கணக்கில் உதவித் தொகை சேர்க்கப்பட்டது.


மேலும், இத்துறையின் அமைச்சர் என்ற முறையில் ஒவ்வொரு தொழிற்சங்கத் தலைவர்களின் அலுவலகத்திற்கும் நேரில் சென்று அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து, அவை தீர்த்து வைக்கப்பட்டது. கருணை உள்ளம் மற்றும் தாய் உள்ளம் கொண்ட தமிழ்நாடு முதலமைச்சரால் ஏக்கத்தோடு இருக்கும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம் மூலம் ஆண்டுக்கு 10,000 வீட்டுமனைகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.



குறிப்பாக தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவுபெற்ற சொந்தமாக வீடு இல்லாத கட்டுமானத் தொழிலாளர்களுக்கு அவர்கள் சொந்தமாக வீட்டுமனை வைத்திருந்தால் அவர்களாகவே வீடு கட்டிக்கொள்ள நிதியுதவி வழங்குவது அல்லது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரியத்தால் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற நிதி அளிக்கும் விதமாக பதிவுபெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நல வாரியத்தின் மூலம் ரூ. 4 இலட்சம் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.


தொழிலாளர்களுக்குரிய நல அட்டை புதுப்பித்தல் மற்றும் பதிவு செய்வதில் காலதாமதம் ஏற்படாதவாறு குறித்த காலத்தில் நிவர்த்தி செய்துதரப்படும். மேலும் கல்வி உதவித் தொகை, திருமணம் உதவித் தொகை, தனிநபர் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் போன்ற எந்தத் தொகையாவது நீண்ட காலமாக வராமல் இருந்தால் உடனடியாக என்னிடம் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டால் போதும் ஒரு வார காலத்திற்குள் உதவித் தொகை உங்கள் இல்லம்தேடி வரும் என்று பேசினார்.