சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்துள்ள, நங்கவள்ளி பழங்கோட்டை பகுதியில் தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் புதிதாக கட்டப்பட்டு கடந்த நவம்பர் மாதம் 7 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிலையில் கும்பாபிஷேகத்தின் போது ஆதி திராவிட சமூகத்தினர் உள்ளே நுழைந்து சாமி தரிசனம் செய்ய அக்கிராமத்தை சேர்ந்த சுதிர் மான் உடையார் சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மேட்டூர் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற அமைதி பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, கும்பாபிஷேகம் போது ஆதி திராவிட சமூக மக்கள் உள்ளே நுழைந்து சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி 48 வது நாள் மண்டல பூஜை நிறைவு நாள் பூஜை நடைபெற இருந்த நிலையில் ஆதிதிராவிடர் சமூக மக்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு வந்த பொழுது, சுதிர் மான் உடையார் சமூகத்தை சேர்ந்தவர்கள் கோவிலின் உட்பிரகாரத்துக்குள் சென்று சாமி தரிசனம் செய்யக்கூடாது என்றும் வெளியே நின்று சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்றும் கோவிலில் உள்ளே சுமார் 50 பெண்கள் மற்றும் கோவிலை சுற்றி 200 பேர் நின்று எதிப்பு தெரிவித்தனர். 


அப்போது ஆதிதிராவிடர் சமூக மக்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேச்சேரி மேற்கு ஒன்றிய செயலாளர் ஜனார்த்தனன் தலைமையில் ஆதிதிராவிடர்கள் தங்களை உள்ளே அனுமதிக்க வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மேட்டூர் வட்டாட்சியர் முத்துராஜா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராஜா மற்றும் காவல் துறையினர் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், மேட்டூர் வட்டாட்சியர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஆகியோர் நேற்று முன்தினம் கோவிலை பூட்டி சீல் வைத்தனர். இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலுக்கு சீல் வைத்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.