தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த 5 ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி நிறைவடைந்தது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை 154 மையங்களில் சுமார் 38 ஆயிரம் மாணவ-மாணவிகள் பொதுத் தேர்வு எழுதினர். இதனைத் தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்று முடிந்த மேல்நிலை வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியுள்ளது.


அதன்படி சேலம் மாவட்டத்தில் பொருத்தவரை ஆத்தூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தாரமங்கலம் செங்குந்தர் மேல்நிலைப் பள்ளி, சேலம் சாரதா பால மந்திர் மேல்நிலைப் பள்ளி உட்பட நான்கு மையங்களில் விடைத்தாள் திருத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 



இந்த நிலையில் சேலம் மாநகரில் ராஜாஜி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் விடைத்தாள் திருத்தும் அதற்காக சிறப்பு மையம் அமைக்கப்பட்டு ஆசிரியர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தது.


இந்த நிலையில் பணிக்கு வந்த ஆசிரியர்கள் திடீரென விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது வழக்கமாக பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் விருப்பத்தின் பேரில் தன் மையங்கள் நியமனம் செய்யப்பட்டு வந்ததாகவும் தற்போது வழக்கமான நடைமுறை மாற்றப்பட்டு மையஙகள் நியமிக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான ஆசிரியர்கள் தொலைவிலுள்ள மையங்களுக்கு செல்ல வெகுதூரம் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார்.


இதுமட்டுமின்றி கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள், திருமணம், எதிர்பாராத விபத்து, கணவன் அல்லது மனைவி உயிரிழப்பு, முழு உடல் நிலை பாதிப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக விடைத்தாள் திருத்தும் பணியில் இருந்து விலக்கு அளிக்க தமிழக அரசு தரப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் காரணமே இல்லாமல் பல ஆசிரியர்களுக்கு விடைத்தாள் திருத்தும் பணியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 



குறிப்பாக சுற்றுலா செல்வதை கூட காரணமாக காட்டி ஒரு சிலருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக சக ஆசிரியர்கள் குற்றம் சாட்டினார். தொடர்ந்து 3 மணி நேரத்திற்கு மேலாக ஆசிரியர்கள் வேலையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சூழ்நிலையில் இதே நிலை நீடித்தால் அரசு தெரிவித்துள்ள தேதியில் தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதன்பின் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில் நாளை முதல் ஆசிரியர்கள் கேட்கும் இடங்களுக்கு மாற்றி தருவதாக உறுதியளித்த பின்னர் மதியத்திற்கு மேல் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் திருத்து படுவதாக தெரிவித்தனர். நாளை மாற்றப்படும் இடம் குறித்து இன்று மாலைக்குள் அறிவிப்பு வெளியிடப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பின் ஆசிரியர்கள் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர்.