தமிழக சிறைத்துறை டிஜிபியாக அம்ரேஷ் பூஜாரி கடந்த மாதம் நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் நேற்று சேலம் மாவட்ட அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள சேலம் மத்திய சிறையில் நேரில் ஆய்வு செய்து காவலர்களின் குறைகளை கேட்டறிந்தார். சேலம் மத்திய சிறையில் வைக்கப்பட்டுள்ள டெலி இன்டர்காம் வசதிகளை பார்வையிட்டார். மேலும் சிறையில் கைதிகளுக்கு முறையான வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளதா? உணவு குடிநீர் வசதிகள் சுகாதாரமான முறையில் வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் சிறைத்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார். 



குறிப்பாக கைதிகள் அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வரும் நிலையில் மருத்துவ வசதிகள் முறையாக ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்தார் மற்றும் சிறை காவலர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் ஜாமர் கருதி பொருத்துவதற்கு பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு முறையான பணிகள் நடைபெறுகிறதா என்பது குறித்தும் சேலம் மாவட்ட சிறைத்துறை கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வனிடம் விசாரணை நடத்தினார். மேலும் சேலம் பெண்கள் சிறை விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில் அது தொடர்பான ஆய்வையும் மேற்கொண்டார். 



கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண்கள் சிறையில் காவலர்களிடம் ஏற்பட்ட மோதல் காரணமாக ஆறு பேர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட காவலர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. தமிழக சிறைத்துறை டிஜிபி சேலம் மத்திய சிறையில் ஆய்வு செய்ததால் சேலம் மாநகர காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.