சேலம் மாவட்டம் மல்லூர் பகுதியை சேர்ந்த முருகன், வேலாயி தம்பதியர்களின் மகன் மணிகண்டன் (26), இவர் சேகோசார்வ் ஆலையில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வந்தார். இவரது தாயார் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாகவே உயிரிழந்த நிலையில் குடும்பத்தை மணிகண்டன் தான் வழிநடத்தி வந்துள்ளார்.


இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 30 ஆம் தேதி பணிமுடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தபோது, சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி அருகில் வந்தபோது லாரி மோதி படுகாயமடைந்த மணிகண்டன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். 



இந்த நிலையில் நேற்று இரவு மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். மேலும் உடல் உறுப்புகளை தானமாக வழங்குமாறு மருத்துவர்கள் குடும்பத்தாரிடம் பேசியுள்ளனர். அப்போது மணிகண்டனின் தந்தை மற்றும் உறவினர்கள் ஆலோசித்து தனது மகனின் உடல் உறுப்புகளை தானம் வழங்குவதற்கு ஒப்புதல் அளித்தனர். பிறகு மருத்துவர்கள் மணிகண்டனின் உடல் உறுப்புகளை அறுவைசிகிச்சை மூலமாக எடுத்தனர்.


பின்னர் இருதயம், கண்கள், இருதயவாழ்வு, கல்லீரல், சிறுநீரகங்கள் உள்ளிட்ட உடல் உறுப்புகள் எட்டு பேருக்கு வழங்குவதற்கு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. இதுதொடர்பான தகவலையும் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை நிர்வாகம் மணிகண்டனின் தந்தை மற்றும் உறவினர்களிடம் தகவல் தெரிவித்தது. இதையடுத்து ஆம்புலன்ஸ்கள் மூலமாக சென்னைக்கு இருதயம் மற்றும் நுரையீரல், கோவைக்கு கல்லீரல், ஈரோடு மற்றும் சேலத்திற்கு சிறுநீரகம் உள்ளிட்ட ஒவ்வொரு உறுப்புகளும் அனுப்பி வைக்கப்பட்டது. 



காவல்துறையினர் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. அப்போது, மணிகண்டனின் சகோதரி உடல் உறுப்புகள் எடுத்துச்சென்ற பெட்டியை பிடித்துக் கொண்டு கதறி அழுந்தது பார்ப்பவர்கள் கண்ணீரை வரவழைத்தது.


இது குறித்து மணிகண்டனின் தந்தை கூறும்போது என் மகன் இறந்தும் எட்டு பேருக்கு உயிர் கொடுத்து உள்ளார் என்பது மகிழ்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது. அவர் இல்லாமல் மிகுந்த வேதனையில் வாடுவதாக தெரிவித்தார். தனது குடும்பத்தை வழி நடத்தி வந்த மகன் உயிரிழந்த நிலையில் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாகவும் தனது இரண்டாவது மகனுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்துள்ளார்.


இந்த சம்பவம் சேலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.