ஒகேனக்கல்லில் பரிசல் பயணத்திற்கு கூடுதல் கட்டணம் கேட்பதால், சுற்றுலா பயணிகள் ஆத்திரமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 


தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வெப்பத்தை தணித்து, ஆயில் மசாஜ் செய்து, இங்குள்ள அருவிகளில் குளித்தும், பரிசல் சவாரி செய்தும், மீன் சமையல் உண்டு மகிழ்ந்து செல்கின்றனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் பரிசலில் செல்ல அரசு ரூ.750 கட்டணம் விதித்துள்ளது. இதில் 4 பேர் மட்டுமே செல்ல வேண்டும். அதில் கட்டாயமாக பாதுகாப்பு உடை அணிந்திருக்க வேண்டும் என கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 



 

ஆனால் பரிசல் ஒட்டிகள், அரசு விதிக்கப்பட்ட கட்டணத்திற்கும் அதிகமாக வசூலித்து வருகின்றனர். இதில் ஒரு‌ பரிசலுக்கு ரூ.2000 முதல் 5000 வரை பரிசல் ஓட்டிகள் சுற்றுலா பயணிகளிடம் வசூல் செய்கின்றனர். இதற்கு நீண்ட நேர பயணம், தனியாக குளிக்க வைத்தல் போன்ற காரணங்களை சொல்கின்றனர். மேலும் கூடுதல் தொகை தரவில்லை என்றால் பரிசல் வருவதில்லை என தெரிவித்துவிடுகின்றனர். இதனால் சுற்றுலா பயணிகள் வேறு வழியில்லாமல் கொடுத்துவிட்டு செல்கின்றனர். இந்நிலையில் இன்று ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணிகள் பரிசலில் பயணத்திற்கு வந்துள்ளனர். அப்பொழுது பரிசல் கூடுதல் கட்டணம் கேட்டுள்ளனர். ஆனால் பரிசலுக்கு ரூ.750 தானே நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் என கூறி, டிக்கெட் வாங்க சென்றுள்ளனர். ஆனால் பரிசல் ஓட்டிகள் வந்தால் மட்டுமே டிக்கெட் கொடுக்கப்படும், உங்களிடம் தர முடியாது என தெரிவித்துள்ளனர்.‌



 

இதனால் ஆத்திரமடைந்த சுற்றுலா பயணிகள் பரிசல் ஓட்டிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.‌ அப்பொழுது பரிசல் ஓட்டிகள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப, ரூபாய் 3000 முதல் 5 ஆயிரம் வரை எக்ஸ்ட்ரா சார்ஜ் செய்து வசூலிப்பதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அருகில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலரிடம், இதுகுறித்து புகார் தெரிவித்தனர். ஆனால் அந்த காவலர், சுற்றுலா பயணிகளிடம் அதற்கு ஒருமையில் பேசியுள்ளார். இதனால் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யும் பரிசல் ஓட்டிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அதிக அளவில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.