சேலம் தனியார் சட்டக் கல்லூரியின் 40வது ஆண்டு மாணிக்க விழா நேற்று நடைபெற்றது. அக்கல்லூரியின் தலைவர் சரவணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், உச்ச நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் மற்றும் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். குறிப்பாக இந்த நிகழ்ச்சியில், மத்திய சட்டக் கல்லூரியில் படித்த தற்போது உச்ச நீதிமன்றம், மாவட்ட தலைமை நீதிமன்றம், கிளை நீதிமன்றங்களில் நீதிபதிகளாக உள்ள முன்னாள் மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “உயர்நீதிமன்றத்தின் பரிந்துரையை ஏற்று கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 77 நீதிமன்றங்கள் திறக்கப்பட்டுள்ளன. பெருகி வரும் வழக்குரைஞர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக நீதிமன்றங்கள் திறக்கப்படும். இதற்கு தமிழக அரசு நீதித்துறைக்கு உறுதுணையாக இருக்கும். சட்ட ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் நீதிதுறையின் செயல்பாடு மிக முக்கியம். நீதித்துறையின் தேவைகளை எந்த அளவு பூர்த்தி செய்ய முடியுமோ அந்த அளவு பூர்த்தி செய்வோம்” என அமைச்சர் ரகுபதி உறுதியளித்தார்.


 



இவரை தொடர்ந்து பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ், “குற்றங்களை தடுப்பதும், தண்டிப்பதும் அரசின் கடமை. அதை சரிவர செய்யாவில்லை என்றால் பாதிப்பு அரசுக்கு தான். நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் நீதித்துறையில் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் அதிகம் உள்ளன. செயற்கை நுண்ணறிவு மூலமாக பொதுமக்கள் தங்களது கேள்விகளை முன்வைக்கின்றனர். அதற்கு வழக்கறிஞர்களை காட்டிலும் கூடுதலான தகவல்களை செயற்கை நுண்ணறிவு தருகிறது. இதனால் வழக்கறிஞர்களுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது” என்றார். மேலும், சட்டம் பயிலும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்னும் 20 ஆண்டுகளில் 70 முதல் 80 சதவிகிதம் பெண்கள் நீதித்துறையில் பணியாற்றுவார்கள் என்றார். தமிழும், நீதியும் சட்டமும் ஒன்று. உலகத்திற்கே நீதி சொன்ன மொழி தமிழ்மொழி" என உச்சநீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் கூறினார்.