சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் விதி மீறல் குற்ற செயல்களில் ஈடுபட்ட பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு விதி மீறல்கள் நடைபெற்று உள்ளதாக புகார்கள் வந்துள்ளன. பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகந்நாதன் மற்றும் பதிவாளர் தங்கவேல் மீது தமிழக அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை கண்டித்து பெரியார் பல்கலைக்கழகத்தின் நுழைவாயில் முன்பு இந்திய மாணவர் சங்கம் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மாணவர் சங்க சேலம் மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.



சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து பல்வேறு குற்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. குறிப்பாக பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மற்றும் பதிவாளர் தங்கவேல் ஆகியோர் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு ஊழல் மறைக்கேட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இது சம்பந்தமாக உரிய விசாரணை மேற்கொண்டு நிரூபணம் ஆகியும் இதுவரை பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மற்றும் பதிவாளர் தங்கவேலை தமிழக அரசு தகுதி நீக்கம் செய்யவில்லை. மேலும் இப்பிரச்சனையில் தமிழக ஆளுநர் ஆ.என்.ரவி, பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார் எனவும் உடனடியாக இருவரையும் தமிழக அரசு பதவி நீக்கம் செய்ய வேண்டும். பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழக ஆளுநர் நேரடியான தலையீடு செய்து வருகிறார். குறிப்பாக மாணவர்கள் மத்தியில் இந்துத்துவா கொள்கைகளை பரப்பி வரும் செயல் நீடித்து வருகிறது. எனவே பெரியாரின் பெயரில் இயங்கி வரும் பல்கலைக்கழகத்தில் சாதிய மத போதனைகள் அதிகம் அரங்கேறி வருவதாகவும் மாணவர்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் செயல்பட்டு வருவதாகவும் இந்திய மாணவர் சங்கத்தினர் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.



சேலம் பெரியார் பல்கலைக்கழக ஊழல் முறைகேட்டு மற்றும் விதிமீறல் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மற்றும் பதிவாளர் தங்கவேலு இருவரையும் உடனடியாக பதவி நீக்கம் செய்து தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் சம்சீர் அகமது மற்றும் மாநில செயலாளர் அரவிந்த சாமி இருவரும் தெரிவித்தனர்.