சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி பெரியமாரியம்மன் கோவில் திருவிழாவில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட கலவரத்தில் 5 மேற்பட்ட கடைகளுக்கு தீ வைத்தும், கற்களை வீசி தாக்கிக் கொண்டதால் பெரும் கலவரம் வெடித்தது. இதன் காரணமாக காவல்துறையினர் தடியடி நடத்தி கலவரக்காரர்களை கலைத்தனர். இந்த சம்பவம் நடைபெற்றபோது தீவட்டிப்பட்டி பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது.



இந்த நிலையில் தீவட்டிப்பட்டி பகுதியில் பதட்டம் தனியாத நிலையில் அச்சத்தின் காரணமாக இரண்டாவது நாளாக இன்று கடைகள் திறக்கப்படவில்லை. மேலும் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க கலவரம் ஏற்பட்ட தீவட்டிப்பட்டி பேருந்து நிறுத்தம், மாரியம்மன் கோவில் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் பிரச்சனைக்குரிய பெரிய மாரியம்மன் திருக்கோவிலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் ஆய்வு மேற்கொண்டார். இந்த மோதல் நடைபெற்றபோது எடுத்த வீடியோ காட்சிகளை வைத்து இதுவரையில் கலவரத்தில் ஈடுபட்ட 28 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கைது எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என தெரிகிறது. மேலும் தீவட்டிப்பட்டி பஸ் நிறுத்தம் நாச்சினம்பட்டி, தீவட்டிப்பட்டி காலனி, பெரிய மாரியம்மன் கோவில் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மூன்று மாவட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


இந்த நிலையில் சேலம் தீவட்டிப்பட்டி பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் அருள் மற்றும் சதாசிவம் ஆகிய இருவரும் ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட கடைகள் கலவரம் ஏற்பட்ட கிராமப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்டனர்.



இதைத்தொடர்ந்து பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியது, இந்த கலவரம் திட்டமிட்டு ரவுடி கூட்டத்தால் நடத்தப்பட்ட கலவரம். அரசியலுக்கும் ஜாதி, மதங்களுக்கும் அப்பாற்பட்டது. ஒரே கிராமத்தில் ஒரே குடும்பங்களாக நான்கைந்து சமூகங்கள் வாழ்ந்து வருகின்றனர். இரண்டு தரப்பிடமும் காவல்துறை அமைதி பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தபோது, ஒரு கூட்டம் வேண்டுமென்று சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் அமைதிபடுத்த முயற்சித்தபோது காவல்துறையினர் மீதும் கற்களை வீசிதாக்குதல் நடத்துகின்றனர். மேலும் திட்டமிட்டு கடைகள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தை பொருத்தவரைக்கும் அனைவரும் ஒரே குடும்பமாக வசித்து வருகிறார். இதில் ஜாதி, மதம், இனம், மொழி இவற்றில் பாகுபாடு இல்லை. உரிய நடவடிக்கை காவல்துறை எடுத்துள்ளனர்.


இரண்டு தரப்பிலும் அப்பாவிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவில் பண்டிகை பார்ப்பதற்காக வந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பட்டியல் இன மக்கள் வாழும் பகுதியில் காவல்துறையினர் கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் மிகுந்த வேதனை அடைவதாக கூறினார். இதற்காக மிகப்பெரிய கண்டனத்தை பதிவு செய்ய வந்துள்ளோம். இந்த கலவரத்திற்கு யார் காரணமானவர்களோ? அவர்கள் யாராக இருந்தாலும் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும், இரண்டு தரப்பிலும் கைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகளை காவல்துறையினர் விடுவிக்க வேண்டும் என்றும் கூறினார். அப்பாவி மக்கள் ஒருவர் கூட பாதிக்க கூடாது என்றும் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று பேசலாம் என்று இருந்தோம். ஆனால் காவல்துறையினர் அனுமதிக்க மறுத்துவிட்டனர். கலவரத்திற்கான பிரச்சினை அமைதியான பிறகு பட்டியலின மக்களை சந்தித்து அமைதி பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக கூறினார். இங்கு ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று என்றார்.