கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டவர்களை, தந்தையே மகன் சுபாஷையும், அவரது பாட்டியையும் தண்டபாணி என்பவர் கொடூரமாக வெட்டி கொலை செய்தார். அப்போது நீண்ட நேரம் போராடியதால் சுபாஷின் காதல் மனைவி அனுசுயா உயிர் தப்பினார். இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியது, அந்தப் பெண்ணின் உடலில் பல இடங்களில் வெட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளது். சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த பெண்ணிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வருவதால் தற்போது அவர் உடல் நலம் தேறி வருகிறார். அவருக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவர்களுக்கு தனது பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், அவர் குணமாக இன்னும் இரண்டு மாதங்கள் ஆகிவிடும் என்றார். 



சாதி மறுப்பு திருமணம் என்பதற்காகவே மகன் மற்றும் தாயை கொன்றதோடு திருமணம் செய்து கொண்ட இளம் மருமகளையும் தண்டபாணி சரமாரியாக வெட்டி இருக்கிறார். அந்த அளவில் சாதி வெறி ஆட்டி படைக்கிறது. எனவே சமூகத்தில் இருப்பவர்கள் சாதி வெறியை எதிர்த்து போராட வேண்டும் என்றும் அனுசுயாவிற்கும், சுபாஷ்க்கும் நடந்துள்ள இந்த கொடுமை, நாளை வேறு யாருக்கும் நடந்து விடக்கூடாது என்ற அவர், நாம் திரும்பத் திரும்ப கேட்டுக் கொள்வது, தமிழக அரசு சாதிய ஆணவத்தினை தடுக்க தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்பது தான். தமிழக முதலமைச்சர் இதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அப்போது தான் சாதியை தூண்டி விடுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முடியும். சாதிய ஆணவக் கூட்டம் என்றால், யார் யார் எல்லாம் பின்னால் தூண்டி விடுகிறார்களோ? அவர்களை எல்லாம் தண்டனைக்குள் கொண்டுவர வேண்டும் என்பதற்காகத்தான் சாதி ஆணவ கொலை தடுப்பு சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். 



தனது ஒரே மகனையும், தாயையும் வெட்டக் கூடிய அளவுக்கு சாதி வெறி தற்போது தலை விரித்து ஆடுகிறது. எனவே இந்த கொடுமை நீடிக்க கூடாது. சமுதாயத்தில் ஆழமாக புரையோடி உள்ள சாதி வெறியை எதிர்த்து போராடாமல், அரசியல் கட்சியினர் ஏன் மௌனம் காக்கிறார்கள் என்று தெரியவில்லை. சாதி வெறி அடங்காவிட்டால் இந்த கொடுமை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கும். எனவே பள்ளிக்கூடத்தில் இருந்தே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சாதி வெறி எதிர்த்து விழிப்புணர்வு இயக்கத்தை அரசு உருவாக்க வேண்டும். இந்த சாதி வெறியை கருவருக்க, வேறருக்க அனைத்து சமூகத்தினரும், அனைத்து அரசியல் கட்சிகளும் சாதி வெறிக்கு எதிராக களமிறங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்வதாக பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.