தமிழகம் முழுவதும் குட்கா, புகையிலை, கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் போன்ற கடுமையாக தண்டிக்க வேண்டும் என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.கலைச்செல்வன் உத்தரவுப்படி, தருமபுரி காவல் துணை கண்காணிப்பாளர் வினோத் தலைமையில் தொப்பூர் காவல் ஆய்வாளர் மாதேஷ், ஐயப்பன், மணிகண்டன், பாலமுருகன் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் குமுதா, முருகன், ஆறுமுகம், உமாமகேஸ்வரி ஆகியோர் அடங்கிய காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனை தொடர்ந்து சேலம்-தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் பாளையம் சுங்க சாவடி பகுதியில் தொப்பூர் காவல் துறையினர் மற்றும் தருமபுரி ஆயுதப்படை பிரிவை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட காவலர்கள் தீவிர வாகன சோதனை நடத்தி வந்தனர். அப்பொழுது பெங்களூருவில் இருந்து கேரளாவிற்கு சென்ற ஈச்சர் வாகனத்தை நிறுத்தி காவல் துறையினர் சோதனை செய்தனர். இந்த லாரி ஓட்டுனர் ரஸித் மற்றும் கிளீனர் அஸ்ரப் அலி உள்ளிட்டோர் மாட்டுத் தீவனம் ஏற்றிச் செல்வதாக கூறியுள்ளனர். அதற்குரிய ஆவணங்களையும் காவல் துறையிடம் காண்பித்துள்ளனர். ஆனால் முன்னுக்கு பின் முரணாகவே பதில் அளித்துள்ளனர்.
இதனால் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் வாகனத்தை சோதனையிட்ட போது 118 மூட்டை சாக்குப்பைக்குள் 2 வகையான 3600 கிலோ குட்கா பாக்கெட்டுகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 23 லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா மற்றும் லாரியை பறிமுதல் செய்து லாரியின் டிரைவர்கள் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இதனை தொடர்ந்து தருமபுரி காவல் துணை கண்காணிப்பாளருக்கு வினோத்துக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து காவல் நிலையத்திற்கு வந்து காவல் கண்காணிப்பாளர் வினோத் இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தி, ஓட்டுநர்கள் ரஸித், அஸ்ரப் அலி இருவரையும் கைது செய்தனர். மேலும் 23 இலட்சம் மதிப்பிலான 118 மூட்டை குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் தேசிய நெடுஞ்சாலையில் தருமபுரி வழியாக தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் அதிகமாக கடத்தப்படுவதாகவும், அதனை முழுதும் கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். தொப்பூர் அருகே 3.5 டன் குட்கா கடத்தி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.