அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பெரிய பிரச்னையை உருவாக்கியுள்ளது. இதனால் கடந்த இரு தினங்களாக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக கட்சி அலுவலகத்தில் உறுப்பினர்களுடன் கூட்டம் நடைபெற்றது. அதன்பின் இருவரின் வீடுகளில் தனித்தனியாக ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. இதனிடையே அதிமுக பொதுக்குழு சென்னையில் 23-ஆம் தேதி கூட உள்ளது. இதைத் தொடர்ந்து சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவில ஒற்றை தலைமை எடப்பாடி பழனிசாமி தான் என்பதே, அதிமுகவின் சாதாரண தொண்டனின் விருப்பமாக உள்ளது என்று அதிமுகவை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் மூலம் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. 



இந்த நிலையில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று காலை சென்னையில் இருந்து சேலத்திற்கு வருகை தந்தார். அவருக்க  வழியெங்கும் தொண்டர்கள் உற்சாகமான முறையில் வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில் சேலம் மாவட்டம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்திற்கு வருகை தந்த அதிமுக இணை ஒருங்கிணைபாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, சேலம் மாவட்டம் முழுவதும் இருந்து கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஒன்று திரண்டு வந்து வரவேற்றனர். குறிப்பாக சேலம் மாவட்டத்திலுள்ள கெங்கவல்லி சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, வீரபாண்டி இராஜா, சேலம் தெற்கு பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், புறநகர் மாவட்ட செயலாளர் ஆத்தூர் இளங்கோவன், அதிமுக கவுன்சிலர்கள், சேலம் மாநகராட்சியின் முன்னாள் மேயர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்டம் முழுவதும் இருந்து அதிமுக தொண்டர்கள் என அனைத்து தரப்பினரும் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு வந்து அவருக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர்.


மேலும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்கள் அனைவரும் மலர் கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்து வரவேற்றபோது, ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு எடப்பாடி பழனிசாமி, தேசிய தலைவர் எடப்பாடி பழனிசாமி என்று தொண்டர்கள் கோஷம் எழுப்பினர். 



அதன்பின் நெடுஞ்சாலை நகரில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நேற்று மாலை முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, மோகன் மற்றும் முன்னாள் மாநிலங்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோருடன் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின் முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், தங்கமணி மற்றும் சரோஜா ஆகியோர் எடப்பாடி பழனிசாமி உடன் ஆலோசனை மேற்கொண்டனர். காலை முதல் இரவு வரை நீடித்தது முன்னாள் அமைச்சர்களின் வருகையால் நெடுஞ்சாலை நகரில் பரபரப்பான சூழல் நிலவி வந்தது. இதற்கிடையே சேலம் நெடுஞ்சாலை நகரில் இருந்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, திருவண்ணாமலைக்கு புறப்பட்டுச் சென்றார்.