தருமபுரி அருகே முன்னாள் அமைச்சர் கக்கனால் தொடங்கப்பட்ட பள்ளி கட்டிடம் இடிந்ததால், மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

 


தமிழக முதல்வராக காமராஜர் ஆட்சியின் போது, தருமபுரி மாவட்டம் உட்பட, தமிழகத்தின், பல்வேறு பகுதிகளில் அரசு பள்ளிகளுக்கு சொந்தமாக பள்ளி கட்டடங்கள் கட்டப்பட்டது. கடந்த, 1965, ஜூலை, 21 ல் சேலம் ஹரிஜன நல இலாகா சார்பாக, தருமபுரி அடுத்த தடங்கத்தில், புதிய பள்ளி கட்டிடத்தை, அப்போதைய தமிழக உள்துறை அமைச்சர் கக்கன் இந்த பள்ளியை திறந்து வைத்தார். இதில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, இந்த பள்ளியில் கூடுதல் பள்ளி கட்டத்தை கடந்த, 1966 செப்டம்பர் 19ல், அமைச்சர் கக்கன் திறந்து வைத்தார்.

இந்த சிறப்பு மிக்க பள்ளியில், ஆதிதிராடவிடர் நலத்துறை அலுவலர்களின் ஒத்துழைப்பு இல்லாததால், இந்த பள்ளியில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து சரிந்து வந்தது.



 

குறிப்பாக, இந்த பள்ளியின் ஓட்டு மேற்கூரையை கூட சீரமைக்க ஆதிதிராவிட நலத்துறை அலுவலர்கள் ஆர்வம் காட்ட வில்லை. இதனால், பொன் விழா கண்ட இந்த பள்ளியின் மேற்கூரை கடந்த, எட்டு மாதங்களுக்கு முன், சரிந்து விழுந்தது. இதையடுத்து இந்த பள்ளியில் படித்து வந்த, 15 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கக்கன்ஜீபுரத்தில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு தற்காலிகமாக அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனாலும், சேதமான இந்த பள்ளியின் மேற்கூரையை சீரமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை. இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்து நேற்று துவக்க பள்ளிகள் துவங்கப்பட்டது. இந்த பள்ளியில் படித்த மாணவர்கள் வழக்கம் போல், நேற்று கக்கன்ஜீபுரம் அங்கன்வாடி மையத்துக்கு வந்தனர்.



 

இந்த மையத்தில் தற்போது, 30 குழந்தைகள் உள்ள நிலையில் மாணவர்கள் அமர போதிய இடம் கிடைக்கவில்லை. இதையடுத்து, அரசு துவக்கப்பள்ளி மாணவர்கள் பள்ளியின் வெளியே உள்ள பெரிய அரச மரத்தின் கீழ் அமர வேண்டிய நிலை ஏற்பட்டது. இதுகுறித்து, தகவல் அறிந்த அதிகாரிகள், மாணவர்களை மீண்டும் அங்கன்வாடி மையத்தில் அமர வைக்க உத்தரவிட்டனர். மேலும், சேதமான பள்ளி கட்டத்தை பார்வையிட்டு சென்றனர்.

 

ஆதிதிராவிடர் நலத்துறைக்கு போதிய நிதி வரும் நிலையில், அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பள்ளியை கடந்த, எட்டு மாதங்களுக்கு மேல் சீரமைக்காமல், பள்ளி மாணவர்களை அங்கன்வாடி மையத்தில் அமர வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், தருமபுரி மாவட்ட  நிர்வாகம் மூத்த அமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு உரிய பள்ளி கட்ட வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். மேலும் சேதமான பள்ளி கட்டத்தை சீரமைக்க ஆர்வம் காட்டாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர்கள் மத்தியில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் கண்ணனிடம் கேட்டபோது, கக்கன்ஜிபுரம் அங்கன்வாடியில் செயல்படும் தொடக்கப்பள்ளிக்கு போதிய இடவசதி இல்லாத காரணத்தால், மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்திருப்பதாக தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து நேரில் சென்று ஆய்வு செய்து, மாணவர்களை அங்கன்வாடியில் அமர வைக்க அறிவுறுத்தியுள்ளோம். மேலும் இதற்கு மாற்று ஏற்பாடாக வேறு கட்டிடங்களை வழங்கவுள்ளோம். ஓரிரு நாட்களில் அந்த கட்டிடத்தில் மாணவர்கள் அமர்ந்து படிப்பார்கள் என தெரிவித்தார்.