சேலம்: சேலம் அரசுப் பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் நடத்திய சங்கமம் 2025 நிகழ்ச்சியில் வால்வோ குரூப் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் கமல் பாலி, வேகமாக மாறிவரும் உலகில் வெற்றிபெறுவது குறித்த ஆழ்ந்த கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

சேலம் அரசு பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் (அலும்னி) சங்கம் நடத்திய  59 ஆண்டுகள் பழமையான கல்லூரி வளாகத்தில் உள்ள பத்மஸ்ரீ முத்தையன் அரங்கத்தில் உலக அலும்னி தினமான சங்கமம் 2025 நடைபெற்றது.

வால்வோ குரூப் இந்தியாவின் நிர்வாக இயக்குநரும் தலைவருமான கமல் பாலி இந்த நிகழ்விற்கு தலைமை விருந்தினராக கலந்துகொண்டார். நவின்’ஸ் பில்டர்ஸ் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் ஆர். குமார், என்.எல்.சி.ஐ.எல் (NLCIL) இயக்குனர் (பவர்) எம். வெங்கடாசலம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இயக்குனர் டாக்டர் வி. பாலசுப்பிரமணியன் மற்றும் ஜி.சி.இ-யின் பசுமைப் பாதுகாவலர் எஸ்.எம். மணிமாறன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். 

வேகமாக மாறிவரும் உலகில் வெற்றியாளர்களின் வழிமுறை' என்ற தலைப்பில் கமல் பாலி பேசியதாவது: "உலகம் முழுவதும் பல பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. வல்லரசு நாடுகளுக்கு இடையேயான போட்டி மீண்டும் தொடங்கியுள்ளது. உலகமயமாக்கல் முடிவுக்கு வருகிறது. செயற்கை நுண்ணறிவு (AI), டிஜிட்டல்மயமாக்கல், நிலைத்தன்மை மற்றும் எரிசக்தி மாற்றம் ஆகியவை வளர்ந்து வருகின்றன.

இந்தியா வேகமாக வளரும் பொருளாதாரமாக சிறப்பாகச் செயல்படுகிறது. நமக்கு மக்கள்தொகை, பன்முகத்தன்மை, டிஜிட்டல் தொழில்நுட்பம், கார்பன் குறைப்பு, மற்றும் ஜனநாயகம் எனப் பல சாதகமான அம்சங்கள் உள்ளன. எல்லோரும் ஒரு உயர்ந்த நோக்கத்துடன் தொடங்கி, நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பை உருவாக்க வேண்டும். நிறுவனங்கள் அதன் அமைப்பைவிட கலாச்சாரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வாழ்நாள் முழுவதும் கற்பவர்களாகவும், குழந்தைகளின் ஆர்வத்தை இழக்காமலும் இருப்பது அவசியம்.  நமக்கு நாமே புதிய சவால்களை ஏற்படுத்திக்கொள்வது முக்கியம். ஒரு சிறந்த தலைவர் என்பவர், தன்னைப் போன்ற பல தலைவர்களை உருவாக்குபவரே. எதிர்கால உலகம் என்பது ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மைக்கு உரியது." இவ்வாறு அவர் பேசினார்.

1975-ஆம் ஆண்டு முன்னாள் மாணவரும், சிறப்பு விருந்தினர்களில் ஒருவருமான டாக்டர் குமார், செங்குத்து மற்றும் கிடைமட்ட வளர்ச்சி (vertical and horizontal growth) ஆகிய இரண்டையும் நோக்கமாகக் கொள்வது முக்கியம் என்று கூறினார். "கிடைமட்ட வளர்ச்சி பொருள் சார்ந்த லட்சியங்களை அடைய உதவுகிறது. ஆனால், செங்குத்து வளர்ச்சி என்பது நாம் மற்றவர்களுக்கு உண்மையாக உதவும்போது கிடைக்கிறது. நவின்ஸ் நிறுவனத்தின் 36 ஆண்டுகால பயணத்தில், வாடிக்கையாளர்களின் நலன்களுக்கு முதலிடம் கொடுக்கும் எங்கள் அடிப்படைக் கொள்கையை நாங்கள் தொடர்ந்து கடைபிடித்து வருகிறோம்," என்று அவர் குறிப்பிட்டார். மேலும், மக்கள் மகிழ்ச்சியுடன் அரசாங்கத்திற்கு வரி செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஊக்கமளிக்கும் இந்த உரைகளைத் தொடர்ந்து, பட்டிமன்றம், பாட்டு மற்றும் நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில், சேலம் அரசு பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர்.