சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 30க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. அதில் பல கிராமங்களுக்கு நீண்ட நாட்களாக சாலை வசதி இல்லாமல் உள்ளது. எனவே அங்கு வாழும் மக்களை கருத்தில் கொண்டு ஏற்காடு மலை கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தும் வகையில் சேலம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஏற்காட்டில் உள்ள மாரமங்கலம் மலை கிராம மக்களின் 35 ஆண்டுகால கனவை நிறைவேற்றும் வகையில் சாலையே இல்லாத மலைக் கிராமத்திற்கு தார் சாலை அமைத்து பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டு மலை கிராம மக்களால் பேருந்து சேவை தொடங்கி வைக்கப்பட்டது. சாலையை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் ரிப்பன் வெட்டியும், மலை வாழ் மக்களுடன் சேர்ந்து பேருந்தில் பயணம் செய்து துவக்கி வைத்தார். இந்த சாலைப் பணி முடிந்து பேருந்து வசதி தொடங்கப்பட்டுள்ளதை மலை வாழ் மக்கள் உற்சாகமாக தாரை, தப்பட்டையுடன் ஆடி, பாடி உற்சாகமாக வரவேற்றனர்.



நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் கார்மேகம், "மலைவாழ் மக்களுக்கு சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முழுமையாக கிடைக்கச் செய்வதை உறுதி செய்திடும் வகையில் மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் 9 கிராம ஊராட்சிகள் உள்ளன. அதில் ஒன்று தான் மாரமங்கலம் ஊராட்சி, இந்த மாரமங்கலம் ஊராட்சிக்குப் போதுமான சாலை வசதிகள் இல்லாததால் சுமார் 25 கிலோ மீட்டர் சுற்றி வந்து ஏற்காடு அடையும் சூழ்நிலையில் இருந்து வருகின்றனர். மலைவாழ் மக்கள் 35 ஆண்டுகாலமாக இதற்கு தீர்வு காண முடியாமல் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் மாரமங்கலம் ஊராட்சி கிராம மக்கள் தங்களுக்கு இரண்டு மலைகளை இணைக்ககூடிய வகையில் 2.6 கிலோ மீட்டர் இணைப்புச் சாலை வசதி செய்து கொடுத்தால் 25 கிலோ மீட்டர் தூரம் என்பது 4 கிலோ மீட்டராக குறையும் என்று முதல்வர், முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும் தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்து வந்தனர்.



இதனைத் தொடர்ந்து அரசு அதிகாரிகள் கொண்டு சாலை அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தற்போது ரூ.7.01 கோடி மதிப்பீட்டில் புதிய இணைப்புச் சாலை மிகச்சிறப்பாக போடப்பட்டுள்ளது. மாரமங்கலம் கிராம ஊராட்சிக்குட்பட்ட நார்த்தஞ்சேடு, கொட்டஞ்சேடு. செந்திட்டு. அரங்கம், பெலாக்காடு உள்ளிட்ட 18 கிராமங்கள் பயன் பெறும் வகையில் சாலை பணிகள் முடிவுற்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நேற்று சோதனை ஓட்டம் வழங்கப்பட்டுள்ளது. நடத்தப்பட்டு இன்று முதல் பேருந்து சேவையும் இந்த மலை கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தி தருவதற்கென அரசு அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் ஆகியோர் இணைந்து செயல்பட்டு நானும் நேரடியாக மூன்று முறை இக்கிராமப் பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொண்டு குறிப்பாக பல்வேறு மழைப்பொழிவு நேரங்களிலும் என்னோடு அலுவலர்கள் இந்த மலைப்பாதையில் நடந்து வந்து தொய்வில்லாமல் பணிகள் மேற்கொண்டதால் இக்கிராம மக்களின் 35 ஆண்டுகால கனவு நிறைவடைந்துள்ளது. இதற்கு கிராம பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கினார்கள்" என்று கூறினார்.