நடிகர் அஜித் குமார் நடித்துள்ள துணிவு திரைப்படம் நேற்று அதிகாலை ஒரு மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி சேலம் மாவட்டத்தில் நேற்று அதிகாலை ஒரு மணிக்கு 12 திரையரங்குகளில் துணிவு திரைப்படம் திரையிடப்பட்டது. முன்னதாக நேற்று இரவு 10 மணிக்கு திரையரங்குகளில் குவிந்த அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக சேலம் மாநகர பகுதிகளில் உள்ள ஏஆர்ஆர்எஸ் மல்டிபிளக்ஸ், கே.எஸ் தியேட்டர், கைலாஷ் பிரகாஷ், ஆஸ்கார் சினிமாஸ், கீதாலியா, கௌரி உள்ளிட்ட திரையரங்குகளில் துணிவு படம் அதிகாலை ஒரு மணிக்கு வெளியிடப்படும் என அறிவித்திருந்தனர். இதனை அறிந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட அஜித் ரசிகர்கள் காவல்துறையின் அனுமதி இன்றி பட்டாசுகளை வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.



இதனிடையே, சேலம் மாநகர் கிச்சிப்பாளையம் பகுதியில் உள்ள கீதாலயா தியேட்டரில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் விதமாகவும், ஆபத்தான நிலையில் துணிவு பட கட்டவுட் வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து சேலம் டவுன் காவல்துறையினர் ஆபத்தான நிலையில் இருந்த துணிவு பட கட்டவுட்டை அகற்ற உத்தரவிட்டனர். அதன்படி கீதாலயா தியேட்டர் நிர்வாகம் அந்த கட்டவுட்டினை அகற்றியது. இருப்பினும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக கட்டவுட் வைத்ததால் கீதாலயா தியேட்டர் மீது சேலம் டவுன் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.



முன்னதாக படம் ரிலீஸ் ஆகும் சமயத்தில் ரசிகர்கள் இடையே தகராறு ஏற்படக்கூடாது என்பதற்காக காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி, தியேட்டர் வளாகத்திலும், பொது இடங்களிலும் மேளம் அடித்துக் கொண்டு, ஊர்வலமாக சென்று பொது மக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு செய்யக்கூடாது. சினிமா பார்க்க வரும் பொதுமக்களுக்கு தொல்லை தரக் கூடாது. சினிமா தியேட்டருக்குள் வரும் ரசிகர்கள் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை எதையும் எடுத்து வரக்கூடாது. குடிபோதையில் தியேட்டருக்கு வரக்கூடாது. மேடை மீது ஏறி ஆட்டம் போடக்கூடாது. தியேட்டரில் பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டால் ரசிகர் மன்றங்களே பொறுப்பேற்க வேண்டும். அதற்குரிய இழப்பீடு தர வேண்டும். ரசிகர்மன்ற காட்சிகள் திரையிடும்போது ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு சம்பந்தப்பட்ட ரசிகர் மன்றங்களே பொறுப்பேற்க வேண்டும். ரசிகர்களை ஒழுங்குபடுத்த போதுமான தன்னார்வலர்களை ரசிகர் மன்றத்தினர் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் நியமிக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் தரப்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 


இதற்கு முந்தைய காலங்களில் விஜய் மற்றும் அஜித் குமார் திரைப்படங்கள் தனித்தனியே வெளியான போது ரசிகர்கள் திரையரங்கம் கண்ணாடி, கதவுகள் போன்றவற்றிற்கு சேதங்களை ஏற்படுத்தினர். எனவே இந்த முறை காவல்துறையினர் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டுப்பாடுகளை ரசிகர் மன்றம் பொறுப்பாளர்களிடம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.