சேலத்தில் இயங்கி வரும் பிரபல ஜவுளி நிறுவனத்தில் வருமானவரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் மூன்றாவது நாளாக இன்றும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கரூர் மாவட்டத்தை தலைமை இடமாக கொண்டு செயல்படும் (சிவா டெக்ஸ்டைல்ஸ்) என்ற தனியார் ஜவுளி நிறுவனத்தின் கரூர் நகரம், குளித்தலை, சேலம், திருப்பூர், ஊட்டி உள்ளிட்ட ஐந்து கிளைகள் மற்றும் வீடு மற்றும் அலுவலகங்கள் என ஏழு இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
இதன் ஒருபகுதியாக சேலம் மாவட்டம் நான்கு ரோடு பகுதியில் அமைந்துள்ள ஜவுளி கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் இறங்கியுள்ளனர். நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு துவங்கிய சோதனை இரவு வரை நடத்தப்பட்டது. நான்கு கார்கள் மூலமாக வந்த 10 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் குழுவாக பிரிந்து சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு தலங்களாக சென்று சோதனை நடத்தி வருகின்றனர். முறையாக வருமானவரி கட்டப்பட்டுள்ளதா? ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்தும் இந்த சோதனையில் அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக கடந்த தீபாவளி பண்டிகை காலங்களில் அதிகளவில் விற்பனை நடைபெற்றது. இந்த நிலையில் இந்த வருமானவரி சோதனை தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை 10 மணிக்கு மீண்டும் சிவா டெக்ஸ்டைல்ஸ் கடைக்கு வந்த வருமான வரித் துறையினர் துறையினர் இரண்டாம் நாளாக சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா என எந்தவித தகவல்களும் வெளியாகவில்லை. மேலும் இன்றைய சோதனையும் இரவு வரை நீடிக்க படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.