சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (54). விசைத்தறி தொழில் செய்து வரும் இவர் கடந்த 10 ஆண்டுக்கு மேலாக மனைவியை பிரித்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு 24 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் அதை பகுதியை சேர்ந்த 24 வயது விமலா என்ற பெண் கிருஷ்ணன் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றதில், இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறி உள்ளது. இதைத்தொடர்ந்து தனது 54 வயதுடைய காதலர் கிருஷ்ணன் கடந்த 10 ஆண்டுகளாக மனைவி இல்லாமல் கஷ்டப்படுவதை பார்த்த விமலா, அவரை திருமணம் செய்து வாழ முடிவு செய்தார்.
இந்தநிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருவண்ணாமலையில் தாலி கட்டி திருமணம் கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த விமலாவின் தந்தை அய்யம்பெருமாள் தனது மகளை கிருஷ்ணன் கடத்தி சென்றதாக தாரமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இருவரையும் தாரமங்கலம் காவல் துறை தேடிவந்தனர். இதைறிந்த காதலர்கள் இருவரும் திருமணம் ஆன நிலையில் பாதுகாப்பு கேட்டு தாரமங்கலம் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். உடனடியாக காவல்துறையினர் பெண்ணின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் தாரமங்கலம் காவல் நிலையம் வந்த பெண்ணின் உறவினர்கள் பட்டம் படித்த பெண், இப்படி அறிவிழந்து பாதை மாறி, தந்தை வயதுள்ளவரை திருமணம் செய்யலாமா என்று பல அறிவுரைகளை கூறி கதறி அழுதனர். மேலும், படித்த வாலிபருக்கு திருமணம் செய்து வைப்பதாக பெண்ணின் காலில் விழுந்து கதறினர்.
ஆனால், விமலா தான் விரும்பி காதலித்த தனது காதல் கணவர் கிருஷ்ணன் உடன் தான் சென்று வாழ்வேன் என கூறினார். இருவரும் மேஜர் என்பதாலும், காதல் கணவருடன் செல்வதாக கூறியதாலும், பெண்ணின் விருப்பபடி 54 வயதுடைய காதல் கணவர் கிருஷ்ணனுடன், 24 வயது காதல் மனைவி விமலாவை தாரமங்கலம் காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். இருவரும் காவல் நிலையத்தில் இருந்து கைகோர்த்துக்கொண்டு சந்தோசமாக சென்றனர். இதனிடையே 54 வயதானவரை 24 வயது பெண் காதல் திருமணம் செய்த தகவல் தாரமங்கலம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.