தருமபுரியில் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில் விதை விநாயகர் சிலைகள் செய்து, ஆன்லைனில் விற்பனை செய்யும் பட்டதாரி இளைஞர்கள். மக்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதால், சிலை உற்பத்தி ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக மகிழ்ச்சி.

 

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் பிளாஸ்டிக் பொருட்களால், சிறிய விநாயகர் சிலைகள் முதல் ரசாயனம் கலந்த பெயிண்ட்களால், வண்ண வண்ணமாய் பெரிய விநாயகர் சிலைகள் வரை தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இதனை அணைகள், ஏரி, குளம், குட்டைகளில் கரைக்கும்போது, நீர்நிலைகள் மாசடைவதும், நீர்வாழ் உயிரினங்கள் அழிந்துவிடுகிறது. இந்நிலையில் தருமபுரியை சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் ஒன்றிணைந்து கடந்த 7 ஆண்டுகளாக சுற்றுச் சூழலை பாதிக்காத வகையில் களிமண்ணால் விநாயகர் சிலைகளை தயாரித்து, வாட்டர் கலரில் வண்ணமிட்டு, அதை ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வருகின்றனர். இந்த சிலைகளில் வேம்பு, புங்கன் மற்றும் காய்கறிகள், கீரை  உள்ளிட்ட விதைகளை களிமண்ணில் வைத்து, அரை அடி முதல் 2 அடி வரையிலான விநாயகர் சிலைகளை இளைஞர்கள் தயாரித்து வருகின்றனர். இந்த சிலைகள் 200 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை விற்கப்படுகிறது.  தமிழ்நாட்டில் ஆன்லைனில் பெறுபவர்களுக்கு தபால் செலவின்றி சிலைகள் அனுப்பப்படுகிறது. 



 

இந்த சிலைகள் இந்தியா மட்டுமன்றி அமெரிக்கா, கனடா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளுக்கும் ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கு விநாயகர் சிலைகள் கூரியர் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு காய்கறி மற்றும் கீரை விதைகளையும் இந்த விநாயகர் சிலையில் வைத்து தயாரிக்கின்றனர். நகர் புறங்களில் இடவசதி இல்லாமல் மாடி தோட்டங்கள் அமைப்பதற்கு இது பயனளிக்கும். எந்த விதமான செயற்கை மற்றும் வேதிப் பொருட்களை கலக்காமல், இயற்கையான முறையில் விநாயகர் சிலைகள் இங்கு தயாரிக்கப்படுகிறது. இந்த சிலைகளை பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பல்வேறு நாடுகளில் இருந்தும் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி கூரியர் மூலம் பெறுகின்றனர்.

 

இந்த சிலைகள் விற்பனைக்காக தனி இணையதளத்தையும் உருவாக்கி உள்ளனர் இந்த பட்டதாரி இளைஞர்கள். இந்த விநாயகர் சிலைகளை தண்ணீரில் கரைக்கும் போது, அதில் உள்ள களிமண் மற்றும் விதைகள் செடிகளாக வளர வழிவகை செய்கிறது. குறிப்பாக நகர்புறங்களில், அடுக்குமாடி இல்லங்களில் தனியாக வைத்து வணங்குவதற்காக அதிக அளவிலான சிலைகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  மேலும் தினமும் கூரியரில் தினசரி 30 முதல் 50 சிலைகள் வரை அனுப்பப்படுகிறது.  மேலும் சிலைகளை எடுத்து செல்ல, கூரியர் அலுவலகத்திலிருந்து உற்பத்தி செய்கின்ற இடத்திற்கே வந்து எடுத்து செல்கின்றனர்.



 

இந்த சிலைகளை விநாயகர் சதுர்த்தி முடிந்து தண்ணீரில் கரைக்கும் போது, மர செடிகள் வளர்ந்து மரங்களாக உருவெடுக்க வழிவகை ஏற்படும்.  அதை இல்லங்களில் தொட்டிகளில் வைத்து கரைத்தால் அந்த தொட்டிகளில் சிலை தயாரிப்புக்கு பயன்படுத்தப்பட்ட களிமண் மற்றும் அதில் உள்ள காய்கறி மற்றும் கீரை வகைகள் நல்ல முறையில் வளர்ந்து பயனளிக்கும் என தெரிவிக்கின்றனர். மேலும் இந்தாண்டு க்ரோபேக் மற்றும் சிறிய தேங்காய் நார் குடுவைகளையும், செடிகளுக்கு தேவையான உரத்தினையும் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கின்றனர். இதனால் சிலைகளை கரைத்த பின், அந்த தண்ணீரை க்ரோபேக், குடுவையில் ஊற்றினால், தண்ணீர் வெளியேறி, பூந்தோட்டி போன்று பயன்படுத்தி செடிகளை வளர்க்கலாம்‌. இந்த விலை விநாயகர் சிலை மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளதால், 500 சிலைகளில் தொடங்கிய உற்பத்தி, இந்தாண்டு 8000 சிலை வரை அதிகரித்துள்ளது. மேலும் இந்தியாவில் கொண்டாடப்படும் அனைத்து திருவிழாக்களும் சுற்றுச் சூழலை பாததுகாக்கவும், நீர்நிலைகள் மாசடையாமல், நீர்வாழ் உயிரினங்களை பாதுகாக்க முடியும் என பட்டதாரி இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.