சேலம் மேற்கு தொகுதியில் உள்ள முத்துநாய்கன்பட்டியில் டாஸ்மாக் மதுபான கடை நீண்ட காலமாக செயல்பட்டு வந்தது. இந்த டாஸ்மாக் கடையால் பொதுமக்கள் பல்வேறு தொந்தரவுகளுக்கு உள்ளாகி வந்தனர். குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் அப்பகுதியை கடந்து செல்லும் போது மதுபோதையில் சிலர் டாஸ்மாக் அருகிலேயே குடிபோதையில் விழுந்து கிடக்கின்றனர். அப்பகுதி மக்கள் இந்த டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி வந்த நிலையில் டாஸ்மாக் கடையை மூட கேட்டு ஒருமாதம் முன்பு பாமக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் அருள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்பொழுது மாவட்ட மேலாளர், ஒருமாதத்தில் கடையை மூடுகிறோம் என எழுதிக் கொடுத்ததினால் போராட்டம் தற்காலிகமாக ஒருமாதம் ஒத்திவைக்கப்பட்டது. கடந்த 9 ஆம் தேதி ஒரு மாதம் நிறைவடைந்ததால், மக்களோடு டாஸ்மாக் கடைக்குச் சென்ற சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள், ஒரு மாத கால கேடு இன்றுடன் நிறைவு பெறுகிறது. எனவே உடனடியாக டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று ஊழியர்களிடம் கேட்டுக் கொண்டார்.
அப்போது டாஸ்மாக் கடை ஊழியர்கள் காலில் விழுந்து கடையை இடமாற்றம் செய்யுங்கள் என கெஞ்சி கேட்டுக்கொண்டார். உடனடியாக அங்கிருந்து சட்டமன்ற உறுப்பினர் அருள் ஆதரவாளர்கள் அவரை எழுந்திருக்குமாறு கேட்டுக் கொண்டனர். அவர்களின் கோரிக்கை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் அருள் அங்கிருந்து கிளம்பி சென்றார்.
இதன் பின்னர் டாஸ்மாக் கடை ஓரிரு நாட்களில் மூடப்பட்டது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முத்துநாயக்கன்பட்டியில் டாஸ்மாக் மதுபான கடை அமைந்திருந்த தெருவிற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் பெயரை பொதுமக்கள் இணைந்து வைத்துள்ளனர். இதற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்