சேலம் மாநகர் பழைய பேருந்து நிலையம் ஜலால்புரா பகுதியைச் சேர்ந்தவர் பாதுஷா மைதீன், இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் தனது வருமானத்தில் சேமித்து வைத்த பணத்தை கொண்டு சீலநாயக்கன்பட்டி சண்முக நகர் பகுதியில் மாட்டிறைச்சி சில்லி கடை நடத்த திட்டமிட்டு அதற்கான முன்தொகையும் கட்டிட உரிமையாளரிடம் வழங்கியுள்ளார். இந்த நிலையில் இப்பகுதியில் மாட்டிறைச்சி சில்லி கடை நடத்துவதற்கு இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனிடையே இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் அன்னதானப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் பாதுஷா மைதீன், கடை வைப்பதற்கு காவல்துறையினர் அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது. இது குறித்து பாதுஷா மைதீன் சேலம் மாநகராட்சி அதிகாரியிடம் கடை நடத்த அனுமதி கேட்டுமனு வழங்கி உள்ளார். மனுவை பரிசளித்த மாநகராட்சி அதிகாரி காவல்துறையினரிடம் தடையில்லா சான்று பெற்று பின்பு கடை நடத்திக்கொள்ள அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து காவல்துறையினரிடம் பாதுஷாமைதீன் தடையில்லா சான்று கேட்டுள்ளார். அதற்கு காவல்துறையினர் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை காரணமாக சான்று வழங்காமல் காலம்தாழ்த்தியதாக தெரிகிறது. இந்த நிலையில் மாட்டிறைச்சி சில்லி கடை நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கூறி, சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் மற்றும் பாதுஷாமைதீன் தனது குடும்பத்தினருடன் பதாகைகள் ஏந்திகொண்டு மாநகராட்சி அலுவலகத்திற்கு மனுகொடுக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்பு அங்குவந்த காவல்துறையினர் பியூஸ் மனுஷ் மற்றும் பாதுஷாமைதீன் குடும்பத்தினர் ஆகியோரை கைது செய்தனர். இதனால் சிறிது நேரம் சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.