சேலம் மாவட்டம் பொன்னம்மாப்பேட்டை அண்ணா நகர் 3 வது தெருவில் உள்ள மாடி வீட்டில் வசித்து வருபவர் மாணிக்கம் (60). இவர் திருமணங்களுக்கு சமையல் வேலைக்கு ஆட்களை அனுப்பி வரும் தொழில்செய்து வருகிறார். நேற்று இரவு வீட்டில் மாணிக்கம் அவரது குடும்பத்தினர் உறங்க சென்றுள்ளனர். இந்த நிலையில் இன்று அதிகாலை மாணிக்கம் அவரது மனைவி ராஜேஸ்வரி எழுந்து டீ வைப்பதற்காக சிலிண்டரை பற்ற வைத்தபோது சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் முதல் மாடியில் இருந்து சுவர் இடிந்து கீழே விழுந்தது. இந்த சிலிண்டர் வெடித்த விபத்தில் வீட்டிலிருந்த மாணிக்கம் (60) அவரது மனைவி ராஜேஸ்வரி, மகள் பானு மற்றும் பானுவின் குழந்தை தீட்சிதா (4) மாணிக்கத்தின் மற்றொரு மகள் பிரியா, இவரது குழந்தைகள் அவினேஷ் (7), முப்பது நாள் ஆன குழந்தை உள்ளிட்ட ஏழுபேர் படுகாயம் அடைந்தனர்.



அனைவரையும் மீட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தவிர ஜன்னல் கண்ணாடிகள் வீட்டு கண்ணாடிகள் அனைத்தும் நொறுங்கி விழுந்தது. இந்த நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் விபத்து ஏற்பட்ட வீட்டிற்கு நேரில் வந்து பார்வையிட்டார். விபத்துக்கான காரணங்கள் குறித்து கேட்டறிந்தார். இந்த விபத்தை அறிந்த சேலம் அம்மாபேட்டை காவல்துறையினர் விரைந்து வந்து விசாரித்தனர். பிறகு சேலம் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் வந்து வீட்டுக்குள் இருந்த மற்ற மூன்று சிலிண்டர்களை அகற்றினர். விபத்து குறித்து சேலம் அம்மாபேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்து நடந்த வீட்டிற்கு அருகில் இருந்த பொது மக்களுக்கு சிலிண்டர் பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிவுரை வழங்கினார்.



இதே போன்ற நேற்று மாலை சேலம் மாவட்டம் நெத்திமேடு பகுதியில் வரதராஜ், கஸ்தூரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சுதாகர் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் உறவினர்களை அழைத்து வீட்டில் கறிவிருந்திற்காக உணவு சமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது சிலிண்டர் கசிவு ஏற்பட்டு தீ பற்றியுள்ளது. இது தொடர்பாக செவ்வாய்பேட்டை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பெயரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். பின்னர் வீட்டிலிருந்த சுதாகர் அவரது உறவினர்கள் ராணி, காவியா, மற்றும் குழந்தைகள் வருஷா ஸ்ரீ, துவாரகன், பிரவீன் ஆகிய ஆறு பேருக்கும் தீக்காயம் ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக ஆறு பேரையும் மீட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தீவிபத்தில் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகியது. இதனிடையே சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஆறு பேரையும் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். மேலும் முழுகவனம் செலுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார். இதுதொடர்பாக அன்னதானப்பட்டி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.