வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் இன்று காலை முதலே கருமேகங்கள் சூழ்ந்து காட்சியளித்தது. பின்னர் சாரல் மழையாக துவங்கி ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழையாக பெய்தது. குறிப்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கிச்சிபாளையம், அஸ்தம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.



குறிப்பாக சேலம் மாநகர் கிச்சிப்பாளையம் பிரதான சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தை சந்தித்தனர். இது மட்டுமில்லாமல் சாலையில் இரண்டு புறமும் உள்ள 50க்கும் மேற்பட்ட கடைகளுக்குள் மழை நீரும் சாக்கடை நீரும் புகுந்துள்ளது இதனால் வியாபாரிகள் மிகுந்த வேதனையடைந்தனர். மேலும் கிச்சிபாளையம் பிரதான சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் காலை பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் பணிக்கு செல்லும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.


இந்த நிலையில் சேலம் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத நிலையில் காவல்துறையினரே களத்தில் இறங்கினர். போக்குவரத்தை சரிசெய்து கொண்டு, சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை எடுத்து விடும் பணியில் ஈடுபட்டனர். இதனை மாநகராட்சி மேற்பார்வையாளர் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்த நிலையில் இது தொடர்பாக கேட்டபோது பணியாளர்கள் வருவார்கள் என்று அலட்சியமாக பதில் அளித்தார். காலை முதலே வழியாக பொதுமக்கள் செல்ல முடியாமல் சிரமப்பட்டு வரும் நிலையில் மாநகராட்சி தாமதமாக செயல்பட்டது பொதுமக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.



இதுகுறித்து பொதுமக்கள் கூறுவையில், எப்பொழுது மழை பெய்தாலும் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதாகவும், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர். மேலும் ஆட்டோ ஓட்டுநர்கள் தீபாவளி நேரம் என்பதால் முக்கியமான வணிக கடைகளுக்கு செல்லும் சாலையாக உள்ளது. மழைக்காலங்களில் இந்த சாலையில் சென்றால் வாகனங்களுக்குள் தண்ணீர் புகுந்து வாகனம் பழுதடைந்து விடுவதாகவும் அதற்கு 20 ஆயிரத்திற்கு மேலாக செலவு செய்யும் நிலை ஏற்பட்டு விடுவதாக வேதனை தெரிவித்தனர். சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் ஆட்டோ உள்ளிட்ட எந்த வாகனங்களும் வராததால் வயதானவர்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக மூதாட்டி ஒருவர் கூறினார் நேற்றைய தினம் சாலையை கடந்து செல்ல முற்பட்டபோது கீழே விழுந்து விட்டதாகவும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.