சேலம் மாநகர் அஸ்தம்பட்டி பகுதியில் சேலம் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு தண்டனை கைதிகள், தடுப்பு காவல் கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறைவாசிகள் உள்ளனர். சேலம் மத்திய சிறையில் உள்ள சிறைவாசிகளின் மன அழுத்தத்தை குறைக்கும் விதமாக விளையாட்டுப் போட்டிகள், நிகழ்ச்சிகள் என பல்வேறு செயல்களை சிறைத்துறை முன்னெடுத்து வருகிறது. இது மட்டுமின்றி சிறைக்கைதிகள் தண்டனைக் காலம் முடிந்து திரும்பும்போது அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் வகையில் தொழிற் பயிற்சி வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சிறைக்கு வருவதற்கு முன்னர் நல்ல முறையில் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தனித்திறமைகள் கொண்ட சிறைக்கைதிகள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் வாயிலாக மற்ற சிறைக்கைதிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த வகையில் தமிழ்நாட்டில் முதன்முறையாக சேலம் மத்திய சிறையில் "சிறைப்பண்பலை" தொடங்கப்பட்டுள்ளது. இத்தனை தமிழ்நாடு சிறைத்துறை டிஜிபி மகேஸ்வரர் தயாள் தொடங்கி வைத்துள்ளார். 



சிறைப்பண்பலை:


சிறைப்பண்பலையில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 6:30 மணி முதல் 6:40 மணி வரை தன்னம்பிக்கை வளர்ப்போம் நிகழ்ச்சி மூலம் சிறைவாசிகளுக்கு தன்னம்பிக்கை சார்ந்த கதைகள் மற்றும் கட்டுரைகள் இடம் பெரும். காலை 6:40 மணி முதல் 6:50 மணி வரை மனமே நலமே நிகழ்ச்சி மூலமாக மருத்துவம், மன நல ஆலோசனைகள் மற்றும் மனம் நலம் சார்ந்த கருத்துக்கள் ஒளிபரப்பப்படும். காலை 6:50 மணி முதல் 6:55 மணி வரை திரையிசை பாடல்கள் நிகழ்ச்சி மூலமாக கருத்துள்ள திரையிசை பாடல்கள் ஒளிபரப்பப்படும். காலை 7:00 மணி முதல் 7:10 வரை தகவல் நேரம் நிகழ்ச்சி மூலமாக இன்றைய தகவல் மற்றும் பொது அறிவு சார்ந்தவை ஒளிபரப்பப்படும். காலை 7:10 மணி முதல் 7:20 மணி வரை சுற்றுப்புறமும் நம் சேவையும் நிகழ்ச்சி மூலமாக சுற்றுப்புற மேம்பாடு சார்ந்தவை ஒளிபரப்பப்படும். காலை 7:20 மணி முதல் 7:25 மணி வரை திறமைக்கு ஓர் சல்யூட் நிகழ்ச்சி மூலமாக சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறு ஒளிபரப்பப்படும். காலை 7:25 மணி முதல் 7:30 மணி வரை திரையிசை பாடல்கள் நிகழ்ச்சி மூலமாக கருத்துள்ள திரையிசை பாடல்கள் ஒளிபரப்பப்படும் எனது சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


ஞாயிறு சிறப்பு நிகழ்ச்சிகள்:


சிறைப்பண்பலையில் ஞாயிற்றுக்கிழமை காலை 7:35 மணி முதல் 7:45 மணி வரை கதைகள் கட்டுரைகள் நிகழ்ச்சியின் மூலமாக சிறைவாசிகள் எழுதும் கவிதைகள் மற்றும் கட்டுரைகள் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 7:45 மணி முதல் 8:00 மணி வரை உங்கள் விருப்பம் நிகழ்ச்சி மூலமாக சிறைவாசிகள் கேட்கும் திரைப்பட கருத்துள்ள பாடல்கள் ஒளிபரப்பப்படும். காலை 8:00 மணி முதல் 8:15 மணி வரை விடுதலைக்குப்பின் என்ற நிகழ்ச்சி மூலம் சிறைவாசிகள் விடுதலைக்குப் பிறகு செய்யக்கூடிய மறுவாழ்வு மற்றும் தொழில் சார்ந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும். காலை 8:15 மணி முதல் 8:30 மணி வரை கருத்துபெட்டி நிகழ்ச்சியின் மூலமாக திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சிகளை பற்றி கைதிகள் எழுதிய கருத்துக்கள் படித்துக் காட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



இதுகுறித்து பேசிய கோவை சரக சிறைத்துறை துணைத்தலைவர் சண்முக சுந்தரம், "சேலம் சிறைச்சாலைகள் சிறைவாசிகளின் மனதை மாற்றும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை கொண்ட பண்பலை ஒன்று துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக சிறைவாசிகள் வேலை செய்து கொண்டிருந்தாலும், அவர்களது காதில் நன்மையான ஒரு நேர்மறையான கருத்துக்கள், நல்ல செய்திகளும் தொடர்ந்து கிடைக்கும் போது அவர்களின் ஆள் மனம் வரை நல்ல கருத்துக்கள் சென்றடையும்" என்று கூறினார். 


இதுகுறித்து சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) வினோத் கூறுகையில், "சிறைவாசிகளின் மனதில் எதிர்மறை எண்ணங்கள் வராமல் தடுப்பது என்பது சிறைப்பணிகள் சவாலான பணியாகும். தமிழ்நாடு சிறைத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் இதற்காக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சிறை பண்பலை என்பது சீர்திருத்தம் நோக்கி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்" என்று கூறினார்.