தமிழக அரசின் பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்தை வரவேற்பதாக தெரிவித்த சேலம் மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம், அந்தத் திட்டத்தில் தனியார் பேருந்துகளையும் இணைக்க வேண்டும் என்றும் ரேஷன் கார்டு போல மகளிருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கி இலவச பயணத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

Continues below advertisement

சேலம் சொர்ணபுரி பகுதியில் தனியார் பஸ் உரிமையாளர் சங்க மாவட்ட செயலாளர் ரவீந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், ஈரான்–அமெரிக்கா போர் உள்ளிட்ட சர்வதேச சூழ்நிலையால் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும், 2018-ஆம் ஆண்டு லிட்டருக்கு ரூ.64 இருந்த டீசல் தற்போது ரூ.102 ஆக உயர்ந்துள்ளது என்றார். மேலும், அரசுப் போக்குவரத்து கழகங்களுக்கு டீசல் விலை உயர்வுக்கு மானியம் வழங்கப்படுவதாகவும், ஆனால் தனியார் பேருந்துகளுக்கு அதுபோன்ற சலுகை இல்லை என்றும் குற்றம்சாட்டினர். 

 

Continues below advertisement

தமிழகத்தின் பல பகுதிகளில் பேருந்து கட்டணம் ரூ.2 வரை உயர்த்தப்பட்டாலும், சேலத்தில் இதுவரை கட்டண உயர்வு செய்யவில்லை என்றும் தமிழகம் முழுவதும் சுமார் 4,500 தனியார் பேருந்துகளும், 22 ஆயிரம் அரசு பேருந்துகளும் இயக்கப்படுவதாகவும், சேலம் மாவட்டத்தில் மட்டும் 60 பேருந்து உரிமையாளர்கள் சேவையை நிறுத்தியுள்ளதாகவும், மேலும் 40 பேர் பேருந்துகளை இயக்க முடியாத நிலையில் உள்ளதாகவும் தெரிவித்த அவர் தற்போது ஒரு கிலோமீட்டருக்கு ரூ.1.10 ஆக உள்ள கட்டணத்தை ரூ.1.20 ஆக உயர்த்த அனுமதி கோரி அரசிடம் மனு அளித்துள்ளதாகவும், இதுகுறித்து அரசு விரைவில் முடிவு எடுக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். 

மேலும், பெண்களுக்கான இலவச பயணத் திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு பெண்களின் பேருந்து பயணம் 34 சதவீதத்தில் இருந்து 64 சதவீதமாக உயர்ந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், இந்தத் திட்டத்தை தனியார் பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தினால் 24 மணி நேரமும் பேருந்துகளை இயக்க தயாராக இருக்கிறோம் என்றார்,மேலும், மின்சார பேருந்துகள் வாங்க தனியார் நிறுவனங்களுக்கும் அரசு மானியம் வழங்க வேண்டும், டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப கட்டணத்தை ஆண்டுக்கு இருமுறை மறுஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும், அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு சுங்கக் கட்டணத்தில் விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். மேலும், போக்குவரத்து துறை அமைச்சர் பார்த்திபனை சந்தித்து கோரிக்கை மனு வழங்கியுள்ளதாகவும், அதை பரிசீலிப்பதாக அமைச்சர் உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.