சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக தமிழ்நாடு அரசுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இதுகுறித்து விசாரிக்க தமிழ்நாடு அரசு விசாரணை குழு ஒன்றை அமைத்தது. இந்த குழு பெரியார் பல்கலைக்கழகத்தில் தொடர் ஆய்வு நடத்தி விசாரித்ததில் முன்னாள் பதிவாளர் தங்கவேல் மீது 8 குற்றச்சாட்டுகள் உறுதியாகிறது. இதையடுத்து கடந்த பிப்ரவரி 29 ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற இருந்த தங்கவேலுவை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் பல்கலைக்கழகத் துணை வேந்தருக்கு 2 முறை கடிதம் அனுப்பப்பட்டது. 



ஆனால் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர், தங்கவேலு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவருக்கு பதவி ஓய்வு வழங்கினார். இந்த நிலையில் ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆனதாக உயர்கல்வித்துறை செயலாளர் கடிதம் எழுதி பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்ட முன்னாள் பதிவாளருக்கு அனைத்து ஓய்வூதிய பலன்களும் வழங்கிட துணைவேந்தர் ஜெகநாதன் மற்றும் பொறுப்பு பதிவாளர் விஸ்வநாதமூர்த்தி ஆகியோர் ஆணை பிறப்பித்துள்ளனர். இதில் முன்னாள் பதிவாளர் தங்கவேலுக்கு மாதம் 74 ஆயிரத்து 700 ரூபாய் ஓய்வூதியம் வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. துணைவேந்தரின் இந்த நடவடிக்கைக்கு பல்கலைக்கழக தொழிலாளர்கள் சங்கத்தினர் மற்றும் பேராசிரியர்கள் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.



இதுகுறித்து பல்கலைக்கழக தொழிலாளர்கள் சங்கத்தினர் கூறுகையில், பெரியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். இவருக்கு துணையாக துணைவேந்தர் விருந்து வருகிறார். ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி பழனிச்சாமி தலைமையில் தமிழக அரசு கமிட்டி அமைத்து விசாரணை நடத்தியது. அதில் முன்னாள் பதிவாளர் மற்றும் துணைவேந்தர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ள அறிக்கையை தமிழக அரசு கவர்னரிடம் வழங்கியுள்ளது. இந்த நிலையில் முன்னாள் பதிவாளருக்கு ஓய்வூதியம் வழங்கியுள்ளது கண்டிக்கத்தக்கது. இதற்கு முன்பாக புகார்களில் சிக்கி உள்ள பேராசிரியர்களுக்கு பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை அனைத்து பண பலன்களையும் நிறுத்தி உள்ள பல்கலைக்கழக நிர்வாகம், முன்னாள் பதிவாளர் தங்கவேலுவிற்கு உடனடியாக மூன்றில் ஒரு பங்கு பென்ஷன் அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.


மேலும், பெரியார் பல்கலைக்கழக விதிகளை மீறி துணைவேந்தர் ஜெகநாதன் செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ள பல்கலைக்கழக தொழிலாளர் சங்கம் மற்றும் ஆசிரியர் சங்கத்தினர், துணைவேந்தர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் உயர்கல்வித்துறை செயலருக்கு கடிதம் அனுப்ப முடிவு செய்துள்ளதாகவும், இது தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.