சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கடந்த மே மாதம் 20 ஆம் தேதி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது துப்பாக்கி, கத்தி, முக மூடி உள்ளிட்ட பொருட்களுடன் வந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் சேலம் மாநகரைச் சேர்ந்த நவீன் சக்ரவர்த்தி, சஞ்சய் பிரகாஷ் என்பதும், நண்பர்களான இருவரும் யூடியூப் பார்த்து, வீட்டிலேயே துப்பாக்கி தயாரித்ததும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து துப்பாக்கி, கத்தி, முக மூடி மற்றும் துப்பாக்கி செய்வதற்கான உபகரணங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். முதற்கட்ட விசாரணையில் இயற்கையை அழிக்கும் விதமாக சேலம் மாவட்டம் ஊத்துமலை அருகில் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. அதற்குச் செல்லும் லாரியில் வெடிகுண்டு வைப்பதற்கு திட்டம் திட்டியது தெரியவந்தது.



தொடர்ந்து ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், அவர்கள் எதற்காக துப்பாக்கி தயாரித்தார்கள். அவர்களுக்கும் ஏதேனும் அமைப்புகளுக்கும் இடையே தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்துவதற்காக, நீதிமன்றத்தில் காவல்துறையினர் மனு தாக்கல் செய்தனர். அதன் பேரில், அவர்கள் இருவரையும் 2 நாள் காவல்துறையினர் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதை தொடர்ந்து, ஓமலூர் காவல் நிலையத்தில் வைத்து இருவரிடமும், கடந்த 2 நாட்களாக சேலம் மாவட்ட எஸ்பி., கியூ பிரிவு டிஎஸ்பி உள்ளிட்ட காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் இருவரும் புரட்சியாளர்களாக மாறும் நோக்கத்தில், துப்பாக்கி தயாரித்ததாகவும், சாமானிய மனிதனில் இருந்து நீதிபதிகள் வரை தவறுகள் நடப்பதால், மனித மாண்புகளையும், இயற்கை மற்றும் அனைத்து உயிரினங்களையும் காக்கும் மனநிலையில், இருவரும் ஒன்று சேர்ந்ததாகவும் கூறியுள்ளனர். மேலும் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், சந்தனக்கடத்தல் வீரப்பன் ஆகியோர் வழியில், சாமானிய மக்களை காக்கும் நோக்கத்தில் புரட்சியாளர்களாக மாறுவதற்காக துப்பாக்கிகளை தயாரித்ததாக தெரிவித்துள்ளனர். அதற்காக ஒரு அமைப்பை உருவாக்கி, தங்களது கொள்கை பிடிப்பில் உள்ளவர்களை அதில் சேர்த்து, நன்மை செய்யும் அமைப்பாக செயல்படும் எண்ணத்தில் இருந்ததாக விசாரணையில் கூறியுள்ளனர். மேலும், நவீன் சக்ரவர்த்தியின் பள்ளி தோழனான சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த கபிலர் என்ற வாலிபர் துப்பாக்கி தயாரிக்க துணையாக இருந்ததாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து கபிலரையும் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து 3 பேரையும் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். 



கடந்த மாதம் தமிழக கியூ பிரான்ச்சிடம் இருந்து மத்திய புலனாய்வு முகமைக்கு வழக்கு மாற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து, முக்கிய ஆவணங்களை கைப்பற்றுவதற்காக மத்திய புலனாய்வு முகமை சோதனையில் இறங்கியுள்ளது. சேலம் செட்டிசாவடி பகுதியில் துப்பாக்கி தயாரிக்க வாடகைக்கு எடுத்த வீட்டில் காலை 6 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர். ஆறு பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் வீட்டின் உரிமையாளரிடம் எப்பொழுது வீட்டிற்கு வாடகைக்கு வந்தார்கள்? ஏதாவது சந்தேகம் ஏற்படும்படி நடந்து கொண்டார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அங்குள்ள பொருட்களை எடுத்து சோதனை நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து சேலம் சன்னியாசிகுண்டு எருமாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.