சேலம், தர்மபுரி, ஈரோடு மாவட்டம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தொப்பூர் - மேட்டூர் - பவானி - ஈரோடு இரண்டு வழி சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. குறிப்பாக, கர்நாடகாவில் இருந்து வரக்கூடிய சரக்கு வாகனங்கள் சேலம் வந்து அதன் பின்னர் ஈரோடு செல்லும் நிலை இருந்து வருகிறது. தொழில் நகரமான ஈரோட்டில் இருந்து வேட்டிகள், பனியன்கள், சட்டைகள் மற்றும் துணி வகைகள் போன்ற ஜவுளி பொருட்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதற்காக பெங்களூரு விமான நிலையம் எடுத்துச் செல்லப்படுகிறது. நாளொன்றுக்கு சுமார் 500க்கும் மேற்பட்ட சரக்கு லாரிகள் ஈரோட்டில் இருந்து சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக பெங்களூருக்கு எடுத்து செல்லப்படுகிறது. 


முதற்கட்ட பணிகள் தற்போது முடிந்துள்ளது


தொப்பூரில் இருந்து மேச்சேரி, மேட்டூர், பவானி வழியாக ஈரோடு செல்லக்கூடிய சாலை பராமரிப்பின்றி இருந்தது. இதனால் 150 கிலோமீட்டர் வரை வாகனங்கள் சுற்றி செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. ஆனால் தற்போது, தொப்பூர், மேச்சேரி, மேட்டூர், பவானி, ஈரோடு செல்லக்கூடிய 85 கிலோ மீட்டர் இரண்டு வழி சாலையை அகலப்படுத்தும் பணிக்காக தேசிய நெடுஞ்சாலை துறை ரூ.186.50 கோடி செலவில் ஒப்பந்தம் அளித்துள்ளது. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் முதற்கட்ட பணிகள் தற்போது முடிந்துள்ளது. மீதமுள்ள மூன்று கட்ட பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த இரண்டு வழி சாலை அகலப்படுத்தும் திட்டம் விரைவில் முடிக்கப்பட்டால் பெங்களூரில் இருந்து ஈரோடு செல்லக்கூடிய வாகனங்களும், ஈரோட்டில் இருந்து பெங்களூரு செல்லக்கூடிய வாகனங்கள் 50 கிலோ மீட்டர் குறைவாக பயணிக்க முடியும். இதன் காரணமாக விரைவில் சென்றடைவதுடன் வாகன செலவும் மிச்சப்படுத்தப்படும் என பொதுமக்கள் கூறுகின்றனர். 


குறைந்த தூரத்தில் விரைந்து செல்ல எளிதாக இருக்கும்


இதுகுறித்து ஈரோட்டில் உள்ள ஜவுளி வியாபாரிகளிடம் கேட்டபோது, ஈரோட்டில் இருந்து பனியன் துணிகள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இங்கிருந்து கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் மலேசியா, சிங்கப்பூர், துபாய், கத்தார் போன்ற வெளி நாடுகளுக்கு பனியன், டீசர்ட் போன்ற பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஈரோட்டில் இருந்து வெளி நாடுகளுக்கு துணிகளை அனுப்ப வேண்டும் என்றால் பெங்களூர் விமான நிலையத்திற்கு அனுப்ப வேண்டும். அங்கிருந்து பல வெளிநாடுகளுக்கு ஜவுளி பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஈரோட்டில் இருந்து பெங்களூருக்கு எடுத்துச் செல்ல கன்டெய்னர் லாரிகளை பயன்படுத்தி வருகிறோம். கன்டெய்னர் லாரிகள் ஈரோட்டில் இருந்து சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக பெங்களூருக்கு அனுப்பப்படுகிறது. தற்போது, ஈரோடு பவானி மேட்டூர் மேச்சேரி தொப்பூர் வழியாக செல்லக்கூடிய இரண்டு வழி சாலை அகலப்படுத்துவதின் மூலம் குறைந்த தூரத்தில் விரைந்து செல்வதற்கு எளிதாக இருக்கும். வாகன செலவும் அதிக அளவில் குறைவதால் லாபம் அதிகரிக்கும் நிலை ஏற்படும். தற்போது, தொப்பூர் - மேச்சேரி - மேட்டூர் - பவானி - ஈரோடு இரண்டு வழி சாலை அகலப்படுத்தும் பணி ஒரு பகுதி நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகளும் விரைந்து முடித்தால் தீபாவளி பண்டிகைக்கு துணிகளை ஏற்றுமதி செய்வதற்கு எளிதாக அமையும் என்று கூறினார்.