சேலம் மாநகரப் பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டுமான பணிகள், பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாக கூறி, இளைஞர்கள் அமைப்பினர் சேலம் அரசு மருத்துவமனை முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை மண்டியிட்டு தவழ்ந்து வந்து நூதனமுறையில் மனு அளித்தனர். அப்போது காவல்துறையினர் தவழ்ந்து வருபவர்கள தடுத்து நிறுத்த முயற்சித்தனர். ஆனால் எழுந்து நிற்காமல் தொடர்ந்து தவழ்ந்து கொண்டே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை வருகின்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



இதுகுறித்து இளைஞர்கள் அமைப்பினர் கூறுகையில், ”சேலம் மாநகரின் மையப் பகுதியான முள்ளுவாடி கேட் பகுதியில் மேம்பால பணியில் கடந்த 10 ஆண்டுகளாக மிக மெதுவாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் முக்கியமான நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நீண்ட வரிசையில் வாகனங்கள் நிற்பதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். இதை வலியுறுத்தியே ஆமை போன்று தவழ்ந்து கொண்டு சாலையில் வந்தோம்” என்றனர்.


இதேபோன்று, சேலம் மணியனூர் திருவேங்கடம் நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார். மாற்றுத்திறனாளியான இவர் இன்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார். அப்போது மாவட்ட ஆட்சியர் கார் நிறுத்தும் பகுதிக்கு சென்ற அவர் திடீரென பாட்டிலில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த டவுன் காவல்துறையினர் அவரை மீட்டு விசாரித்தனர். அதில் கடந்த 26 ஆம் தேதி, தான் வீட்டில் இருந்தபோது அதேபகுதியைச் சேர்ந்த 3 பேர் வீட்டிற்குள் புகுந்து தன்னை கடுமையாக தாக்கினர். தொடர்ந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, கொண்டலாம்பட்டி போலீசில் இது பற்றி புகார் அளித்தேன். 



ஆனால் போலீசார் அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் புகார் அளிக்க வந்துவிட்டேன், பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார். இதையடுத்து அவரை டவுன் காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று போலீசார் விசாரித்தனர். அதில் பரபரப்பு தகவல் வெளியானது. சிவக்குமாருக்கு அந்த பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் தகாத உறவு இருந்துள்ளது. அந்த பெண்ணை கடந்த சில நாட்களாக அடித்து துன்புறுத்தி உள்ளார். இதனால் அந்த பெண், தான் வேலை பார்க்கும் வெள்ளிப்பட்டறையின் உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து பட்டறை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள், சிவக்குமாரின் வீட்டிற்கு சென்று அவரை கண்டித்ததும், மேலும் இதுதொடர்பாக அந்த பெண், கொண்டலாம்பட்டி போலீசில் சிவக்குமார் மீது புகார் அளித்துள்ளதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,


எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,


சென்னை - 600 028.


தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)