தருமபுரி நகராட்சி 30வது வார்டு அமுதம் காலனியில், கழிவுநீர் வெளியேற வழியில்லாமல், கால்வாயில் தேங்குவதால், குடிநீரில் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசி வருவதால், தண்ணீரை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் அவதியில் உள்ளனர்.

 

தருமபுரி நகராட்சிக்குட்பட்ட 30வது வார்டில் உள்ள அமுதம் காலனியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக தனியார் இடத்தை சாலையாகவும், கழிவுநீர் கால்வாயாகவும் பயன்படுத்தி வந்துள்ளனர். இதனால்  போதுமான கழிவுநீர் கால்வாய், சாலைவசதி, குடிநீர் வசதியின்றி தவித்து வருகின்றனர். தற்போது அந்த இடத்தின் உரிமையாளர் கம்பி வேலி அமைத்து, கழிவுநீரை தனது இடத்தில் விடக்கூடாது என தடை செய்துள்ளார். இதனால் கழிவுநீர் வெளியே செல்லமுடியாமல் குடியிருப்பு பகுதிகளில் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயமும் இருந்து வந்தது. 



 

மேலும் கழிவுநீர், கால்வாயிலே தேக்கம் அடைந்து அப்பகுதியில் நிலத்தடி நீரில் கலந்து உள்ளது. இதனால் கைப்பம்பு மற்றும் வீடுகளில் குடிநீர் மோட்டார் பயன்படுத்தும் போது, வரும் தண்ணீர் ஒரு வித துர்நாற்றத்துடன், கழிவுநீர் கலந்து கருப்பு நிறத்தில்  தண்ணீர் வருவதால் அதனை அப்பகுதி மக்கள் பயன்படுத்தாமல், அவதிப்பட்டு வருகின்றனர்.  மேலும் இப்பகுதியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீரும் செல்வதற்கு போதுமான இட வசதி இல்லததால் இப்பகுதி மக்கள் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். மேலும் சிலர் அருகாமையில் உள்ள தெருக்களுக்கு சென்று தண்ணீர் பிடித்து வரும் அவல நிலையும் இருந்து வருகிறது. மேலும் தற்போது வீட்டில் உள்ள தண்ணீருடன் சாக்கடை நீரும் கலந்து வருவதால் பணிக்கு செல்வோர், பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மிகவும் அவதியுற்று வருகின்றனர். மேலும் கழிவுநீர் வெளியேறினால் குடிநீரில் கழிவு நீர் கலக்காமல் தடுக்க முடியும் என்பதற்காக, நகராட்சி ஆணையாளரை நேரில் சந்தித்து புகார் அளித்துள்ளனர். ஆய்வு செய்த நகராட்சி ஆணையாளர் புவனேஸ்வரன் கழிவுநீர் கால்வாயை அடைப்பை எடுத்து விடுவதாக தெரிவித்துள்ளார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

 

மேலும், கழிவு நீர் செல்வதற்கான வசதி மற்றும் சாலை வசதி இல்லாததால் அருகில் உள்ள பட்டாதாரர்களிடம் ஆயிரம் சதுர அடி நிலத்தை இந்த பகுதியில் உள்ள மக்கள் ஒன்றியங்கள் வாங்கிக்கொண்டு அந்த இடத்தை சாலைக்காகவும் கழிவு நீர் வசதிக்காக பயன்படுத்துவதற்கு தயாராக இருந்து வருகின்றனர். இதற்கு நகராட்சியும் மாவட்ட நிர்வாகமும் பொதுமக்களின் வசதிக்காக சாலை மற்றும் கழிவுநீர் கால் வாசி வசதியை ஏற்படுத்திக் கொடுத்து சுத்தமான குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் புவனேஸ்வரனிடம் கேட்டபோது, ”அமுதம் காலனியில் கழிவுநீர் தாழ்மையாய் அடைக்கப்பட்ட இடத்தை நான் நேரில் சென்று ஆய்வு செய்தேன். நகராட்சிக்கு சொந்தமான இடம் வரை சிமெண்ட் சாலையை அமைத்து கழிவு நீர் கால்வாய் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற இடங்கள் தனியாருக்கு சொந்தமான இடம், அவர்கள் அதை பொதுமக்களுக்கு வழங்க தயாராக இல்லை. மனிதாபிமான அடிப்படையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, அருகில் உள்ள பட்டா நிலத்தவரிடம் கழிவு நீர் கால்வாய் மற்றும் சாலை அமைக்க இடம் வழங்குமாறு வலியுறுத்தினேன். ஆனால் அவர் இடத்தினை கொடுக்க முன்வரவில்லை. அதனால் கழிவுநீர் கால்வாய் வெளியேற்றுவதற்கு மாற்று ஏற்பாடு செய்வதற்கு திட்டமிட்டுள்ளோம்” என தெரிவித்தார்.