சேலம் ரயில்வே கோட்டத்தில் தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்கள் கடந்து செல்கிறது. சேலம், ஓமலூர், தின்னபட்டி வழியாக சென்னை, பெங்களூர் மற்றும் பல்வேறு வடமாநிலங்களுக்கு பயணிகள் ரயில்கள் வந்து செல்கிறது. அதேபோல சரக்கு போக்குவரத்து ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து பாட்னா வரை செல்லும் பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் சேலம் வழியாக பட்னா சென்றது. சேலத்தை கடந்து வேகமாக சென்ற கொண்டிருந்த ரயில், ஓமலூர் அருகேயுள்ள கருப்பூர் ரயில் நிலையத்திற்கும் தின்னப்பட்டி ரயில் நிலையத்திற்கு இடையே திடீரென நின்றது. நின்ற ரயிலில் இருந்து இறங்கிய மூன்று பெண்கள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 



ரயிலின் அபாய சங்கிலியை இழுத்த ஒலி கேட்ட, ரயில் ஓட்டுநர்கள் மற்றும் அதிகாரிகள் ரயிலில் இருந்து கீழே இறங்கி வந்தனர். அப்போது போராட்டம் நடத்திய மூன்று பெண்களிடமும் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், "நாங்கள் ரயிலில் பயணம் செய்வதற்கு முன் பதிவு செய்திருந்த இருக்கையை, மர்ம நபர்கள் சிலர் ஆக்கிரமித்து அமர்ந்து கொண்டு எங்களுக்கு இடம் கொடுக்காமல் எங்களை மிரட்டுகின்றனர். மேலும், எங்களிடம் தகராறு செய்கின்றனர். இதனால், அபாய சங்கலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினோம்” தெரிவித்துள்ளனர். உடனடியாக ரயில்வே அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு யாரும் இல்லை. அருகில் இருந்தவர்கள் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறினர்.



இதனை தொடர்ந்து மூன்று பெண்களையும் சமாதானம் செய்த ரயில்வே அதிகாரிகள், அவர்கள் மூவரும் அமர்வதற்கு அடுத்த ரயில் நிலையத்தில் உரிய ஏற்பாடு செய்து தருவதாக உறுதியளித்தனர். இதையடுத்து மூன்று பெண்களும் மீண்டும் ரயிலில் ஏறினர். பெண்களின் திடீர் போராட்டத்தால் சுமார் 20 நிமிடம் நடுவழியில் பயணிகளுடன் ரயில் நின்றது. இதனால், பயணிகளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து ரயில் சுமார் நடுவழியில் 20 நிமிடம் நின்று தாமதமாக புறப்பட்டு சென்ற சம்பவம் குறித்து ரயில்வே உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வடமாநிலத்தை சேர்ந்த பலரும் முன்பதிவு இருக்கைகளில் அமர்ந்துகொண்டு மிரட்டும் சம்பவம் ரயில்களில் தொடர்ந்து நடைபெறுவதாகவும், இதனை தடுக்க ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் தமிழக , கேரள பயணிகள் புகார் கூறுகின்றனர்.