தமிழகத்தில் திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர அமைச்சர் செந்தில் பாலாஜி ஒருவரே போதும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

 

தருமபுரி மாவட்ட அமமுக மாவட்ட செயலாளர் டி.கே.ராஜேந்திரன் இல்ல துக்க நிகழ்வுக்கு ஆறுதல் தெரிவிக்க அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தருமபுரி வந்திருந்தார். அப்பொழுது டி.கே.ராஜேந்திரனின் தாயார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

 

இந்நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தினகரன், “ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அமமுக-வுக்கு குக்கர் சின்னம் கோரி உச்ச நீதிமன்றம் சென்றிருந்தால் நிச்சயம் கிடைத்திருக்கும். ஆனால், அதற்கான அவகாசம் இல்லாததால் அந்த முயற்சியை தவிர்த்து விட்டோம். அம்மாவின் சின்னமான இரட்டை இலை இன்று தவறானவர்கள் கையில், துரோகிகள் கையில் இருக்கிறது. எனவே, அந்த கட்சிக்கும் இடைத் தேர்தலில் ஆதரவு இல்லை. மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக-வுக்கும் ஆதரவு இல்லை. தேர்தல் நேரத்தில் கொடுத்த 90 சதவீதம் வாக்குறுதியை நிறைவேற்றாத ஆட்சி இது. பழனிசாமி நிறுவனம் செய்த தவறால் கடந்த சட்டப் பேரவை தேர்தலில் திமுக-வை மக்கள் ஆட்சியில் அமர்த்தி விட்டனர். ஈரோடு கிழக்கில் பணநாயகம் வெல்லும் சூழல் இருந்தால், ஜனநாயகத்துக்கு இடமில்லை. வரும் மக்களவை தேர்தலில் திமுக-வை வீழ்த்த விரும்பும் கட்சிகளோடு ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும். அந்த அணியில் இணைந்து நாங்களும் பணியாற்ற முன்வருவோம். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே இரவில் 4 ஏடிஎம் மையங்களில் கொள்ளை நடந்துள்ளது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்பதை இது காட்டுகிறது.



 

அதேபோல, தமிழகத்தில் மலிந்து கிடக்கும் போதை பொருட்களால் மாணவச் செல்வங்கள் சீரழிந்து வருகின்றனர். பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர்கள் வேதனையில் தவிக்கின்றனர். தமிழகத்தில் திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர அமைச்சர் செந்தில் பாலாஜி ஒருவரே போதும். ஆளுநர் நியமனத்தில் தமிழகத்தில் இருவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.  தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணனை ஆளுநர் ஆக்கியிருப்பதை வரவேற்கிறோம். அமமுக என்றைக்கும் அதிமுக-வாக செயல்பட வாய்ப்பில்லை. கருணாநிதி நினைவிடத்தில் பேனா சின்னத்தை சொந்த நிதியில் வைக்கலாம்.  கடல் அல்லாத இடத்தில் திமுக அரசு நிறுவினால் யாருக்கும் எந்த ஆட்சேபமும் இல்லை. திமுகவிற்கு 81 கோடி ரூபாய் என்பது பெரியபணம் அல்ல. இதனை தங்களது சொந்த நிதியில் இருந்து கட்டலாம்” என  தெரிவித்தார்.

 

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர் ஆர் முருகன் தர்மபுரி மாவட்ட செயலாளர் டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.