சேலத்தில் குடற்புழு மாத்திரைகள் வழங்கும் முகாமினை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடங்கி வைத்தார். சென்னைக்கு அடுத்தபடியாக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் கட்டண சிகிச்சை வார்டினையும் அவர் தொடங்கி வைத்தார்.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன், “ஒட்டுமொத்த மக்களும் அரசின் மருத்துவ சேவையை பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு உருவாகியுள்ளது. வசதி படைத்த மக்களும் அரசு மருத்துவமனையை நோக்கி வர வாய்ப்புள்ளது. சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு பின்னர், பரிட்சார்த்த அடிப்படையில் கட்டண மருத்துவ சேவை தொடங்கப்பட்டுள்ளது. ரூ.1.25 கோடி மதிப்பில் 10 கட்டண தொகுதிகள் திறக்கப்பட்டுள்ளது. கட்டண சிகிச்சையில் 2 டீலக்ஸ் வார்டுகள் மற்றும் 8 வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வார்டிலும் குளிர்சாதன வசதி, அவசர சிகிச்சை வசதி, தனி கழிவறை, தொலைக்காட்சி பெட்டி என தனியார் மருத்துவமனையைக் காட்டிலும் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. டீலக்ஸ் அறை ரூ.2 ஆயிரம் , மற்ற வார்டுகள் ரூ.1200 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் பெரிய அளவில் பயன்படுத்தவார்கள் என எதிர்பார்க்கிறோம். சென்னைக்கு அடுத்தபடியாக சேலத்தில் கட்டண சிகிச்சை வார்டுகள் தொடங்கப்பட்டுள்ளது. 



இதனையடுத்து  மதுரை மற்றும் கோவையில் கட்டண சிகிச்சை வார்டுகள் தொடங்கப்படும். சிறப்பு மருத்துவர்கள் இந்த வார்டுகளில் பணியாற்றுவார்கள். தனியார் மருத்துவமனை மோகத்தை குறைத்த அரசு மருத்துவமனையை நோக்கி பொதுமக்களை வர வைக்கும் வகையில் கட்டண சிகிச்சை வார்டுகள் செயல்படும். குடற்புழு நீக்க மாத்திரைகள் இன்று தொடங்கி ஒரு வாரம் தமிழகம் முழுவதும் வழங்கப்பட உள்ளன. 54 ஆயிரம் அங்கன்வாடி மையங்கள், 8713 துணை சுகாதார நிலையங்கள், 46,138 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், 12 ஆயிரம் தனியார் பள்ளிகள், 2109 கல்லூரிகள் என தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 600 மையங்களில் குடற்புழு மாத்திரைகள் வழங்கப்படும். ஒன்று முதல் 19 வயதினருக்கான இந்த முகாம்கள் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும்.இந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்வதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாடு, ரத்தசோகை தவிர்க்கப்படுவதுடன நோய் எதிர்ப்புச் சக்தியும் கிடைக்கும். ஒன்று முதல் 19 வயதுடைய 2 கோடியே 15 லட்சம் பேர் இதன் பயனடைய உள்ளனர். அதேபோல 20 முதல் 30 வயதுடைய 54 லட்சத்து 67 ஆயிரம் பெண்களும் பயனடைவார்கள். ஒட்டுமொத்தமாக 2 கோடியே 69 லட்சம் குடற்புழு மாத்திரையை பெற்று பயனடைவார்கள்.  இந்தப் பணிகளில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் ஈடுபடுகின்றனர்.



அரசு மருத்துமனைகளில் பொதுமக்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கள ஆய்வில் முதல்வர் என்ற அடிப்படையில் முதலமைச்சர் அடிக்கடி அரசு மருத்துவமனைகளை ஆய்வு செய்து வருகிறார்கள். தனியார் மருத்துவமனைகளால் கைவிடப்பட்ட நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் சிறப்பான சிகிச்சை அளித்து காப்பாற்றி வருகிறோம். தனியார் மருத்துவமனைகள் கால்களை எடுத்தாக வேண்டும் என்ற சிறுமியை காப்பாற்றி அவரை நடக்க வைக்கும் முயற்சியில் அரசு மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். அவருக்கான பிரத்யேக காலணியை ரூ. 1 லட்சம் மதிப்பில் ஜெர்மனியில் இருந்து வரவழைத்து வழங்க முதலமைச்சர் ஒப்புதல் வழங்கியுள்ளார். அரசு மருத்துவர்களின் மகத்தான சேவையை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். 4308 மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட சுகாதார சங்கம் சார்பில் பல் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். மாவட்ட ஆட்சியர்கள் வாயிலாக அடுத்த 15 தினங்களில் 4 ஆயிரம் செவிலியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பணியாளர்களை பணி வரன்முறைப்படுத்துதல், நிரந்தரப்படுத்துதல் என்ற திட்டத்தின் கீழ் 800 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் கடந்த வாரம் வழங்கியுள்ளார்” என்று கூறினார்.


மேலும் பிரபாகரன் உயிரோடு உள்ளார் என்ற கேள்விக்கு, நல்லதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம என்று சொல்லிவிட்டு சென்றார்.