நவீன நாகரிக வளர்ச்சி என்பது மனிதர்கள் பிரமிக்கும் வகையில் உயர்ந்து வருகிறது. டிஜிட்டல் யுகத்தில் தினசரி பல புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் படைப்புகளை விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். இதில் சமீப காலமாக ஏஐ தொழில்நுட்பம் மனிதர்கள் செய்யக்கூடிய பல செயல்களை எளிதில் மனிதர்களை விட வேகமாக செய்து அசத்தி வருகிறது. விண்வெளிக்கு ராக்கெட் அனுப்புவது முதல் சாதாரண விடுப்பு கடிதம் வரை ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்துகின்றனர். ஏஐ தொழில்நுட்பம் தற்போது திருமணத்திற்கு எடுக்கப்படும் புகைப்படங்களை உடனடியாக க்யூ ஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்தால் உடனடியாக டவுன்லோடு செய்யும் வகையில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி திருமண வரவேற்பில் ரோபோ மூலம் வரவேற்பு அளிக்கப்பட்டு அவர்களின் புகைப்படம் உடனடியாக ஏஐ தொழில்நுட்பம் மூலம் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் சேலம் மாநகர் ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மோகனசுந்தரம் மற்றும் பிரீத்தி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் வந்திருந்த அனைவருக்கும் பல தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பல்வேறு புதிய முயற்சிகளை செய்தனர். அதிலும் குறிப்பாக ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கார்னிவல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் மேடையில் மணமகன், மணமகளுடன் எடுக்கப்பட்ட புகைப்படம் உடனடியாக க்யூ ஆர் ஸ்கேனர் முறையில் ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்யும் வகைகள் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பல தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உடனடியாக மேடையில் அமர்ந்திருந்த திருமண தம்பதியினரிடம் கார்னிவல் ஸ்டுடியோஸ் பரிசாக வழங்கப்பட்டது. திருமணம் நடந்து முடிந்த இரண்டு மணி நேரங்களில் திருமண ஆல்பம் கொடுக்கப்பட்டதால் புதுமண தம்பதியினர் மற்றும் உறவினர்கள் ஆச்சரியத்துடன் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து மணமகன் மற்றும் மணமகள் கூறுகையில், "திருமணம் நடந்து முடிந்த உடன் ஆல்பம் அச்சடிக்கப்பட்டு உடனடியாக டெலிவரி செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. திருமணத்தின் போது மண மேடையில் பல வேலைகள் இருந்தாலும் தன் முகம் இன்று எவ்வாறு உள்ளது. தாலி கட்டிய நொடி எனது முகம் எப்படி இருந்தது என்பது மனதில் ஓடிக்கொண்டிருக்கும். ஆனால் மண மேடையில் திருமண ஆல்பம் மற்றும் வீடியோ தயார் செய்து உடனடியாக அதனை வழங்கியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக தாலி கட்டிய தருணத்தை வீடியோவாக திரையில் பார்த்தது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. தொழில்நுட்பங்கள் இதுபோன்று பல நல்ல விஷயங்களை செய்து வருகிறது. குறிப்பாக திருமண ஆல்பம் வருவதற்கு ஒரு வாரமோ அல்லது மாத கணக்கில் கூட ஆகிவிடும். திருமணத்திற்கு வந்த உறவினர்கள் அவர்களது வேலையை பார்க்கச் சென்று விடுவார்கள். அதன் பின்னர் எப்போது நேரம் கிடைக்கின்றதோ அப்போதுதான் பார்ப்பார்கள். சிலருக்கு அந்த வாய்ப்பு எப்போதுமே கிடைக்காத ஒன்றாக அமைந்து விடும். ஆனால் இன்று எங்களது திருமணத்தில் கார்னிவல் ஸ்டுடியோஸ் உடனடியாக ஆல்பத்தை பரிசாக வழங்கியதும், மேடையில் எடுத்த புகைப்படம் உடனடியாக க்யூ ஆர் ஸ்கேனர் மூலம் பதிவிறக்கம் செய்யும் வசதியை ஏற்படுத்தியது எங்களுக்கும் எங்களது குடும்பத்தினருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது" என்று கூறினர்.