கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு இந்த ஆண்டு குறைந்த அளவு நீர் மட்டுமே திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீரின் அளவு படிப்படியாக சரிந்து வருகிறது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு 22 டிஎம்சி மட்டுமே உள்ளது. ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை மேட்டூர் அணைக்கு 125 டிஎம்சி தண்ணீர் கர்நாடகாவில் இருந்து திறக்கப்பட வேண்டும். ஆனால் இந்த ஆண்டு கடந்த 56 நாட்களில் 46 டிஎம்சி தண்ணீர் மட்டுமே மேட்டூர் அணைக்கு வந்துள்ளது. குறுவை, சம்போ சாகுபடிக்காக இந்த ஆண்டு இன்னும் 79 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும் நிலையில், மேட்டூர் அணையில் இருந்து 7 டிஎம்சி தண்ணீர் மட்டுமே திறந்து விட முடியும் நிலை உள்ளது. மீதமுள்ள 15 டிஎம்சி தண்ணீர் 28 மாவட்டங்களுக்கு குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் திருப்பு வைக்க வேண்டியது அவசியம். இதே நிலை நீடித்தால் காவேரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் 8 முதல் 10 நாட்களுக்குள் முழுமையாக நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12 ஆம் தேதி தண்ணீர் ஆனது திறக்கப்பட்டது. அன்றைய தினம் மேட்டூர் அணையில் நீர்மட்டம் 103 அடியாக இருந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையை திறந்து வைத்தார். கர்நாடகா மாநிலத்திலிருந்து மேட்டூர் அணைக்கு வரவேண்டிய நீரானது இதுவரை திறக்கப்படாததால் டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள டெல்டா மாவட்டங்களான சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெற திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் குறுவை, சம்போ சாகுபடிக்கு தயாராக உள்ள நிலையில் போதுமான நீர் இல்லாததால் குறுவை, சம்பா பயிர்கள் தண்ணீர் இன்றி வறண்ட நிலையில் காணப்படுகின்றது. இதனால் தமிழகத்தில் உள்ள காவேரி டெல்டா மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் தமிழக அரசு முறையிட்டு கர்நாடகா மாநிலத்தில் இருந்து பெறவேண்டிய தண்ணீரை உடனடியாக தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என காவேரி டெல்டா மாவட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையில் நீர்வரத்து 4,107 கன அடியாக இருந்தது. அணையின் நீர் மட்டம் 56.85 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 22.39 டி.எம்.சி ஆகவும் உள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது.