சேலம் மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளது. இதில் சுமார் 2000க்கும் மேற்பட்ட மேற்பட்டோர் தூய்மை பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இதில் 750 பேர் நிரந்தர மாநகராட்சி தூய்மை பணியாளராக இருந்து வருகின்றனர். இதர பணியாளர்கள் ஒப்பந்த தூய்மை பணியாளர்களாக பணியாற்றி வந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தூய்மைப் பணி ஒப்பந்தம் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த இரண்டு மாத சம்பள நிலுவைத் தொகை மற்றும் தீபாவளி போனஸ் தொகை ஆகியவற்றை உடனடியாக வழங்க கோரி, ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சேலம் மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து பேச்சுவார்த்தைக்கு வந்த சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகளை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 



இதனால் மாநகராட்சியில் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணியற்றி வருபவர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர். மேலும் தூய்மை பணியாளர்களுக்கான அடையாள அட்டை, சம்பள தொகைக்கான ரசீது, தனியார் ஒப்பந்த நகல் உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கையை வைத்தனர். மேலும் பேச்சுவார்த்தை நடத்த அடுத்த வாரம் அழைப்பதாக வாய்மொழியில் கூறியுள்ளனர். இதற்கு எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்க வேண்டும் என்பதையும் முன் வைத்தனர். தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்கு புத்தாடை, பட்டாசுகள் வாங்குவதற்கு கூட வழியில்லாமல் தவிப்பதாக தூய்மை பணியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பின்னர் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில் ஒரு வாரத்திற்குள் போனஸ் மற்றும் சம்பள பணத்தை தருவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்த நிலையில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து கலைந்து சென்றனர்.