வருவாய்த்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். பேரிடர் மேலாண்மை பிரிவில் கலைக்கப்பட்ட பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் தங்கள் அலுவல் பணிகளை முற்றிலுமாக புறக்கணித்து ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் சேலம் மாவட்ட தலைவர் அருள் பிரகாஷ் தலைமையில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் பெரும்பாலான அரசு அலுவலகங்கள் அலுவலர்கள் யாரும் இன்றி வெறிச்சோடியது. இதனால் சான்றிதழ்கள் வழங்குதல், பட்டா மாறுதல் உள்ளிட்ட துறை சார்ந்த அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். 



இதுகுறித்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில துணை தலைவர் அர்த்தனாரி கூறும் போது, மூன்றாண்டுக்கு மேலாக 2000க்கும் மேற்பட்ட அலுவலக உதவியாளர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. அதனை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகள் எங்களின் நியாயமான கோரிக்கைகள் ஏற்கனவே இரண்டு கட்ட போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை தமிழக அரசு அழைத்து பேசாததால் 3வது கட்டத்திற்கு தள்ளப்பட்டு உள்ளோம் இன்று இரண்டாவது நாளாக நீடிக்கிறது. வருவாய்த் துறையை பொருத்தவரை ஆரம்பிக்கப்பட்ட நாட்களில் உருவாக்கப்பட்ட பணியிடங்களை தற்போது வரை உள்ளது. ஆனால் தமிழகத்தின் மக்கள் தொகை அப்போது இருந்ததை விட பல மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால் தற்போது வரை பணியிடங்களை அதிகரிக்க தமிழக அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டினர். 



தமிழகம் முழுவதும் 11 ஆயிரம் வருவாய் துறை அலுவலர்களும் சேலம் மாவட்டத்தில் 600க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இணைய வழி சேவை சான்றிதழ் தேர்தல் பணி உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடங்கியுள்ளன. இதனால் பொதுமக்களின் பணிகள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். எங்களுடைய கோரிக்கை தமிழக முதல்வர் அறிவித்துள்ள திட்டங்களை செயல்படுத்தி கடைக்கோடி மக்களுக்கும் சென்றிடும் வகையில் வருவாய் துறையினர் செயல்பட்டு வருகின்றனர். உடனடியாக தமிழக அரசு அழைத்துப் பேசி எங்கள் கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும் இல்லையென்றால் தொடர் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.