சேலம் அரசு கலைக் கல்லூரி அருகே மாவட்ட மைய நூலகம் அமைந்துள்ளது. இந்த நூலகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் என தினசரி சுமார் 500 க்கும் மேற்பட்ட வாசகர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் மாவட்ட மைய நூலகத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுக்கவில்லை, கழிவறைகள் சுத்தம் செய்வதில்லை மற்றும் இடவசதி இல்லை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கவில்லை என கூறி டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு நூலகத்தை முற்றுகை ஈடுபட்டனர். தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் எனவும், போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு புதிய வகையான புத்தகங்கள் கொண்டு வந்து மாணவர்கள் பயன்பாட்டிற்கு வைக்கவேண்டும், முறையான இடவசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.மேலும் சேலம் மாவட்டத்தில் மைய நூலாகமாக விளங்கும் இந்த இடம் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பதாக கூறி முற்றுகையில் ஈடுபட்டவர்.
இதுகுறித்து போட்டி தேர்வில் பயிலும் மாணவர்கள் கூறுகையில், சேலம் மாவட்டம் மைய நூலகத்தில் தினம்தோறும் 300 முதல் 500 வாசகர்கள் வரை வந்து செல்கிறோம். ஆனால் நூலகத்தில் அடிப்படை வசதிக்கான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி இல்லாத சூழ்நிலை இருந்து வருகிறது. இது தொடர்பாக பலமுறை மாவட்ட மைய நூலகம் அலுவலர்களிடம் முறையிட்டும் எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. போட்டித் தேர்வுக்கு பயன்படும் வகையில் மாவட்ட மையம் நூலகத்தில் போதுமான புத்தகங்கள் இல்லை. போட்டித் தேர்வு புத்தகங்கள் அனைத்தும் பழைய புத்தகங்களை உள்ளது. தற்போதைய நிலைக்கு பயிலும் வகையில் எந்த ஒரு புத்தகங்களும் நூலகத்தில் இல்லை என்று குற்றம் சாட்டினர். மேலும் கட்டிடங்கள் அனைத்தும் பொழுதாகி உள்ளது. எனவே அரசு இந்த நூலகத்தை புதுப்பித்து சென்னை, மதுரையில் உள்ள நூலகங்களைப் போல் சேலம் மைய நூலகத்தையும் தர முயற்சி தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இது தொடர்பாக சேலம் மாவட்ட மைய நூலக அலுவலர்களிடம் கேட்டபோது, சேலம் மாவட்டம் மைய நூலகத்தில் அடிப்படை வசதிகள் அனைத்தும் உள்ளது. ஆனால் இங்கு வரும் வாசகர்கள் அதனை முறையாக பயன்படுத்துவது இல்லை. வாசகர்களுக்கு குடிநீர் வசதியை செய்து வைத்திருக்கின்றோம். ஆனால் மாணவர்கள் ஆர்ஓ குடிநீரை கைகளை கழுவதற்கும், மதிய உணவு சாப்பிட்டு விட்டு பாத்திரங்களை கழுவுவதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். இதேபோன்று நூலகத்தில் நான்கு ஆண்கள் பயன்படுத்தும் கழிவறையும், நான்கு பெண்கள் பயன்படுத்தும் கழிவறைகளும் உள்ளது. மாணவர்கள் அதனை சுத்தமாக வைத்துக் கொள்வதில்லை. தூய்மை பணியில் ஈடுபடுபவர்கள் முகம் சுழிக்கும் அளவிற்கு கழிவறையை தவறாக பயன்படுத்துகின்றனர். இதுமட்டுமின்றி, அருகிலுள்ள அரசு கலைக்கல்லூரி மாணவர்களும் இங்கு குடிநீர் மற்றும் கழிப்பறையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் நாள் ஒன்றிற்கு ஆயிரம் நபர்களுக்கு மேல் குடிநீர் மற்றும் கழிப்பறையை பயன்படுத்துவதால் வாசகர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதற்கெல்லாம் உடனடி நடவடிக்கை எடுப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் எடுத்துச் சென்று இருக்கிறோம். அவர்கள் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளதாக கூறினார்.