சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பாகல்பட்டி பகுதியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி இன்று பாகல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டது. பள்ளி நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக யாரும் அழைக்கப்படவில்லை. இந்த நிலையில் திமுக நிர்வாகிகள் சிலர் பள்ளியில் இலவச சைக்கிள் கொடுக்கும் நிகழ்ச்சிக்கு தங்களை அழைக்கவில்லை என பள்ளி நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்து பாமக எம்எல்ஏக்கு பள்ளிக்கு வருகை தந்துள்ளார். அப்போது திமுக நிர்வாகிக்கும் சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகி இணைந்து மாணவர்களுக்கு இலவச சைக்கிளை வழங்க முடிவெடுத்தனர். அதன்படி பாகல்பட்டி அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது. 



தொடர்ந்து, சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் மாணவர்கள் இடையே உரையாற்றினார். அப்போது அவர் பேசியது, மாணவர்கள் சைக்கிளை இயக்கும் போது கவனமாக இயக்க வேண்டும். சைக்கிள் ஓட்டும்போது 360 டிகிரியில் கவனத்தோடு சைக்கிளை இயக்க வேண்டும். இன்று சைக்கிள் ஓட்டும் நீங்கள் நாளை விமானம் ஓட்டும் அளவிற்கு வளர்வீர்கள். அப்போதும் உங்களது கவனத்தை சிதற விடாமல் கவனித்து இயக்க வேண்டும் என்று மாணவர்களிடையே கூறினார். 


பின்னர், பள்ளி நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட வாக்குவாதத்திற்கு மன்னிப்பு கேட்கும் விதமாக சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள், திமுக நிர்வாகியின் செயலுக்காக மாணவர்கள் மத்தியில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மாணவர்கள் இதைப் பற்றி நினைக்காமல் முழுமையாக படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் மாணவர்களிடம் கோரிக்கை வைத்தார்.